பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

நாடக மேடை நினைவுகள்


இல்லை என்று பதில் சொல்ல, கொஞ்சம் நகைத்து, சற்று ஆலோசித்து “நாளை சனிக்கிழமை, கோவிந்தசாமி ராவ் நாடகக் கம்பெனியின் ஆட்டத்திற்கு உன்னை அழைத்துப் போகிறேன். இருப்பதற்குள் அவ்விடம்தான் தமிழ் நாடகங்கள் சுமாராக நடிக்கப்படுகின்றன. அதைப் பார்த்து நீ கற்றுக் கொள்” என்று கூறினார். சொன்னபடியே அடுத்த சனிக்கிழமை தனது வயதின் சிரமத்தையும் பாராமல், என் வேண்டுகோளுக்கிரங்கி, தானே அழைத்துச் சென்றார். கோவிந்தசாமி ராவ் நாடகக் கம்பெனி “மனமோஹன நாடக சபா” என்கிற பெயருடையதாயிருந்தது. இக்கம்பெனியின் நாடகங்கள் சென்னை செங்காங்கடை நாடகக் கொட்டகையில் அக்காலம் நடத்தப்பட்டு வந்தன. தற்காலம் இந்த இடத்தில் ஒரு சினிமா நடைபெற்று வருகிறது. அக்காலத்தில் தட்டோடு வேய்ந்த கூரைக் கொட்டகையாயிருந்தது. ஒன்பது மணிக்கு நாடகம் ஆரம்பம் என்று என் தந்தையைத் துரிதப்படுத்தினேன். அவர் அக்காலத்திய நாடகக் கம்பெனிகள் குறிப்பிட்டபடி ஆரம்பியாத வழக்கம் அறிந்தவராய், “அவசரமொன்றுமில்லை, சற்றுப் பொறுத்துப் போகலாம்” என்று கூறியும், நான் நிர்ப்பந்திக்க, எனக்கு புத்தி புகட்ட வேண்டி, “சரி ஆனால் உன்பாடு” என்று பதில் உரைத்து, ஒன்பது மணிக்கு முன்பாக நாடகக் கொட்டகைக்கு என்னை அழைத்துச் சென்றார். போனவுடன், எனக்குப் புத்தி வந்தது. என் தகப்பனார் கூறியது சரியென்று அப்பொழுதுதான் பட்டது. நாடகக் கொட்டகையில் அப்பொழுது தான் ஜனங்கள் வர ஆரம்பித்துக் கொண்டிருந்தனர். விளக்குகள் கூட முற்றிலும் ஏற்றப்படவில்லை.

சற்றேறக்குறைய முக்கால் மணி சாவகாசம் மொட்டு மொட்டு என்று உட்கார்ந்து கொண்டிருந்தேன். ஒன்பதே முக்கால் மணிக்கு நாடகம் ஆரம்பிக்கப்பட்டது. அதற்குள்ளாக ஜனங்கள் கொட்டகையில் நிரம்பினார்கள். அது வரையில் ஏன் நாடகம் குறித்தபடி ஆரம்பிக்கவில்லை என்று ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்த என்னைப் பார்த்து என் தகப்பனார் புன்சிரிப்பாய் சிரித்துக் கொண்டிருந்தார். என் தந்தை எனக்குப் புத்தி வரும்படி செய்த மார்க்கங்களில் இது ஒன்றாகும். தான் கூறுவதற்குக் குறுக்காக நான் என் அறியாமையினால் ஏதாவது ஆட்சேபணை செய்து பிடிவாதம்