பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

27


பிடித்தால், என்னிஷ்டப்படி போகவிட்டு, அதனால் படும் கஷ்டத்தை அனுபவிக்கச் செய்து நான் புத்தியறியும்படி செய்வார்.

அன்றைத் தினம் நாடகம் “ஸ்திரீசாகசம்” என்பது; இது புராதனமான தமிழ்க்கதை யொன்றை ஒட்டியது. ஒன்பதே முக்கால் மணிக்கு ஆரம்பம் செய்யப்பட்டது என்று முன்பு கூறியதனால், நாடகமே ஆரம்பிக்கப்பட்டது என்று நினைத்து விடாதீர்கள். ஒன்பதே முக்காலுக்கு அரங்கத்தின் முன்பு விடப்பட்டிருந்த திரை தூக்கப்பட்டது! உடனே நாடகம் ஆரம்பம் ஆகும் என்று சந்தோஷப்பட்டேன். ஆயினும் அச்சந்தோஷம் அதிக நாழிகை நிலைக்கவில்லை. முன்திரை தூக்கப்பட்டவுடன், மேடையின் உள்ளே சங்கீதம் கேட்டது. பிறகு சுமார் கால்மணிசாவகாசம், விநாயகர் துதி, கலைவாணி துதி, கம்பெனியாரின் இஷ்ட தேவதைகள் துதி முதலியன பாடப்பட்டன. நாடகக் கதையைப் பார்க்க ஆவல் கொண்டிருந்த எனக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. கடைசியில் சுமார் பத்து மணிக்கு கோவிந்தசாமி ராவ் அரங்கத்தின்மீது வந்தார். இப்பொழுதாவது நாடகமானது ஆரம்பிக்கப்பட்டதே என்று குதூஹலம் கொண்ட என் மனமானது சடுதியில் தணிவையடைந்தது. அவர் கையில் தாளங்கள் வைத்துக் கொண்டு “ராமமஹீ” என்கிற பாட்டைப் பாட ஆரம்பித்தார். அப்பாட்டு முடிந்தவுடன் ஒரு வேஷதாரி, அலங்கோலமாய் ஆடை அணிந்து தலையில் வேப்பிலை யைக் கட்டிக்கொண்டு, காலில் சலங்கை அணிந்தவனாய், ஆடிக்கொண்டு அரங்கத்தில் பிரவேசித்தான். இவன் யார் என்று என் தந்தையைக் கேட்க, இவன்தான் விதூஷக வேஷதாரி என்று அவர் எனக்குத் தெரிவித்தார். பிறகு அவனுக்கும் சூத்திரதாரனாக வந்த கோவிந்தசாமி ராவுக்கும் தர்க்கம் நடந்தது. அதில் கோவிந்தசாமி ராவ் சுமார் கால்மணி சாவகாசம், நாடகக்கதை இன்னதென்று சவிஸ்தாரமாகத் தெரிவித்தார்! இதனால் நடக்கப்போகிற நாடகக்கதை இன்னதென்று நான் நன்றாயறிந்த போதிலும், இதெல்லாம் நாடகத்திற்கு அத்தனைப் பொருத்தமாக எனக்குத் தோன்ற வில்லை. இனி அங்கு நான் கண்ட நாடகத்தைப் பற்றியும் அந்நாடகக் கம்பெனியின் தலைவராக இருந்த கோவிந்தசாமி ராவைப் பற்றியும் சற்று சவிஸ்தாரமாக வரைய விரும்புகிறேன்.