பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ந்த இரண்டு மூன்று நாடகங்களுக்குள், எங்கள் சபையின் பெயர் கொழும்புப் பட்டணம் எங்கும் பரவிப் போயிற்று. அதனால் எங்கள் சபையார், இரண்டு மூன்று பெயராகச் சேர்ந்து வெளியிற் போனால் அவர்களைத் திரும்பிப் பார்த்து, இவர்கள் இன்னாரெனப் பேசிக்கொள்ளாத தமிழர்கள் அவ்வூரில் கிடையாது என்று சொல்வது அதிகமாகாது. இதற்கோர் உதாரணத்தை இங்கெழுதுகிறேன். என் தமயனார் ஆறுமுக முதலியார், எங்கள் சபையின் காரியதரிசிகளில் ஒருவராக இருந்தபோதிலும், எங்களிடம் வேலையாட்கள் பலர் இருந்தபோதிலும், தினம் கடைக்குப் போய் காய்கறி பதார்த்தம் வாங்கி வருவதை மாத்திரம் தன்னுடைய வேலையாக மேற்கொள்வார். சாப்பாட்டில் ஆக்டர்களுக்குச் சகல சௌகர்யமும் இருக்கவேண்டு மென்பது அவரது கருத்துப் போலும். அவர் இவ்வழக்கப்படி ஒரு நாள் காலை கடைக்குப்போய்த் திரும்பி வந்ததும் ரிக்ஷா வண்டிக்காரனுக்கு அவனுக்குச் சேர வேண்டிய கூலியைக் கொடுக்க, அவன் அதற்குமேல் அதிகமாக வேண்டும் என்று சண்டையிட்டான். இதைத் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு போலீஸ்காரன் என் தமயனார் ஒன்றும் பிராது செய்யாமலிருக்கும்பொழுதே, அவனைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்துக் கொண்டு போய் சார்ஜனா செய்து, மறுநாள் அவனை மாஜிஸ்ரேட் முன்பாக, “சுகுண விலாச சபை மெம்பர் ஒருவருடன் சச்சரவிட்டதற்காக 5 ரூபாய் அபராதம்” போட்டு வைத்தான்.