பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

418

நாடக மேடை நினைவுகள்


இப்படியே மறுநாள் அந்நாட்டுப் பத்திரிகையில் விளம்பரம் செய்யப்பட்டது. தென் இந்தியாவில் நமது போலீஸ்காரரிடம், நாமாகப் போய்ப் பிராது செய்து கொண்டாலும் அவர்கள் பன்முறை கவனியாததை நான் பார்த்திருக்கிறேன்.

கற்றறிந்தவர்களை அன்றி, பாமர ஜனங்களுடைய மனத்தையும் எங்கள் சபை அங்குக் கவர்ந்ததென்பதற்கு மற்றோர் உதாரணம் கூறுகிறேன். ஒரு நாள் என் தமயனார் ஐஸ்கிரீம் வேண்டுமென்று கேட்ட சில ஆக்டர்களுக்கு அதை வாங்கிக்கொடுத்து, அதை விற்றவனுக்கு அவனுக்குச் சேர வேண்டிய ரூபாய் இரண்டை அவன் கையிற் கொடுக்க, அதற்கு அன்றைத்தினம் எங்கள் நாடகத்திற்கு வருவதற்காக இரண்டு ரூபாய் டிக்கட்டொன்றைக் கொடுங்கள் என்று அவன் வாங்கிக்கொண்டு போனான். ஐஸ்கிரீம் தெருவில் விற்பவன் இரண்டு ரூபாய் டிக்கட் வாங்கிக்கொண்டு நாடகம் பார்க்க இவ்வூரில் வந்தான்; சென்னையில் மாதம் ரூபாய் ஆயிரம் சம்பாதிக்கும் சில பெரிய மனிதர்களிடம் போய் நான் ஏதாவது தர்ம விஷயமாக நாடகம் போடும்போது இரண்டு ரூபாய் டிக்கட்டு ஒன்று வாங்கிக் கொள்ளுங்கள் என்று கேட்டால், அதற்குக் குறைந்த டிக்கட் இல்லையா என்று கேட்டிருக்கின்றனர்! இலங்கையில் ஒரு நாள் என்னைப் பார்க்க வேண்டுமென்று வந்த சாயபு ஒருவர், எங்கள் சபையைப் புகழ்ந்து விட்டு, அடியில் வருமாறு எனக்குத் தெரிவித்தார்: “நேற்றிரவு நாடகத்திற்கு நான் மூன்று ரூபாய் டிக்கட்டு நமக்குப் போதுமென்று நினைத்து மூன்று ரூபாய் டிக்கட்டொன்றை வாங்கிக்கொண்டு நாடக ஹாலுக்குள் பிரவேசித்து உட்காரப்போக, நான் உட்காரவேண்டிய நாற்காலியின் பக்கத்தில் என் கம்பெனியில் வேலை செய்யும் ஒரு வேலையாள் 3 ரூபாய் டிக்கட் வாங்கி உட்கார்ந்திருந்தான். இதைக் கண்டதும், பேசாது திரும்பிப்போய், இன்னும் இரண்டு ரூபாய் அதிகமாகக் கொடுத்து, ஐந்து ரூபாய் வகுப்பில் மாற்றிக்கொண்டேன்” என்றார். சென்னையை விடக் கொழும்பில் பணமானது அதிகமாகப் புழக்கத்தில் இருக்கிறது என்பதற்குத் தடையில்லை .