பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

421


கொண்டு போவதற்காக, பட்டணத்தில் செய்தபடி ஒரு பல்லக்கை இங்கே ஒரு கண்டிராக்டரைச் செய்யச் சொன்னேன். அது அசாத்தியம் என்று சொல்கிறான்,"என்று தெரிவித்தார். பட்டணத்தில் என்ன செய்தீர்களென்று கேட்டதன்பேரில், இன்னபடி செய்தோம் என்று அதை விளங்கச் சொன்னேன். ஏதோ தெரிந்து கொள்வதற்காகக் கேட்கின்றார் என்று நினைத்தேனே யொழிய, இவர் அவ்வாறு ஒரு பல்லக்கைச் செய்தனுப்பப் போகிறார் என்று கனவிலும் நினைத்தவனல்ல. இதைப்பற்றி மறுநாள் நடந்ததை இதை வாசிக்கும் எனது நண்பர்கள் கவனிப்பார் களாக. நாடக தினம், காலையில் என் வழக்கப்படி, நாடக சாலைக்குப் போய் ‘கேசு’விடம் திரைகளையெல்லாம் இப்படி இப்படிக் கட்ட வேண்டுமென்று சொல்லிவிட்டு, திரும்பி வந்து, சாப்பிட்டுவிட்டு, ‘அமலாதித்யன்’ நாடகத்தில் வழக்கப்படி என் பாடத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். இந்தச் சந்தர்ப்பத்தில் இவ் வழக்கத்தைப்பற்றி, நாடக மேடையில் புகழ் பெற விரும்பும் எனது இளைய நண்பர்களுக்கு உபயோககரமான ஒரு சமாச்சாரத்தை இங்கெழுத விரும்புகிறேன். இந்நாடகம் நான் எழுதியது முதல் பன்முறை ஒத்திகை செய்திருக்கிறேன். பன்முறை இந்நாடகத்தை ஆடியுமிருக்கிறேன். ஏறக்குறைய புஸ்தக முழுவதையும் குருட்டுப் பாடமாகவும் ஒப்புவிப்பேன்; இருந்தும், நாடக தினம் என் பாகத்தை மறுபடியும் நான் ஆதியோடந்தமாகப் படித்துத்தான் தீருவேன். இந்த ஒரு நாடகத்திற்கு மாத்திரமல்ல, நான் எழுதிய எல்லா நாடகங்களிலும் அப்படியே. மனோஹரன் நாடகம் ஏறக்குறைய 50 முறை நான் ஆடியிருக்கிறேன். இருந்தும் அதை ஆடுவ தென்றால் நாடக தினம் என் பாகத்தை, ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு நான் படித்துத்தான் ஆகவேண்டும். நான் ஆடவேண்டிய பாகம் எத்துணை சிறிதாயினும் சரி, நான்கு வரியாயினும் சரி, நான் தனியாகப் போய் அதை ஒரு முறை படித்தாக வேண்டும். சென்னையில் விக்டோரியா பப்ளிக் ஹாலில் நான் நாடகமாடும் பொழுதெல்லாம், அன்றைத் தினத்திய பாகத்தை, விக்டோரியா ஹால் மேல்மாடியில், டவர் இருக்கிறதே, அங்கு போய் தனியாக உட்கார்ந்து