பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பகதூர் ப. சம்பந்த முதலியார்

423


வேண்டி வருகிறது. இவர்கள் தாங்கள் மேடையின்மீது நடிக்க வேண்டிய காரியத்தைக் கவனியாது, பிராம்டரையே கவனிக்க வேண்டியிருக்கிறது. இப்படிப்பட்டவர்கள் தாங்கள் செய்யும் சூது, சபையோர்க்குத் தெரியாது என்று எண்ணுகிறார்கள் போலும்; அவர்களுள் யாராவது நாடக மேடையின் அனுபவம் கொஞ்சமேனும் உடையவர்களாயினும் இதை எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள் என்பது நிச்சயம். இதற்கும் மேலாகச் சில ஆக்டர்கள், “நான் பேச வேண்டிய வார்த்தைகள் வரும் போதெல்லாம், நீ அப்படியே படித்துக் கொண்டு வா, நான் சொல்லிக்கொண்டு வருகிறேன்” என்று பிராம்டர்களுக்குச் சொல்வதை நான் காதாரக் கேட்டிருக்கிறேன்; இது பெரிய தவறாகும். ஒருவன் எப்படிப்பட்ட ஆக்டராயிருந்தபோதிலும், இவ்வாறு செய்வானாயின் அவனது ஆக்டு சோபிக்காது என்பதற்குச் சிறிதும் ஐயமில்லை. இவையெல்லாவற்றிற்கும் மேலாக இன்னும் சில ஆக்டர்கள், தாங்கள் பாடவேண்டிய பாட்டிற்குக்கூட பிரத்யேகமாக ஒரு பிராம்டரை ஏற்பாடு செய்து வைத்துக் கொள்ளுகிறார்கள்!

இவ்வாறு தங்கள் பாகத்தைச் சரியாகப் படியாது, பிராம்டர்களை நம்பி மேடைமீது ஏறும் ஆக்டர்களுக்கேற்படும் விபத்துகளில் இரண்டொன்றை இங்கெடுத்தெழுதுகிறேன். ஒருமுறை இப்படிப் பாடம் படிக்காத ஒரு ஆக்டர் த்யுமத்சேனனாக மேடையின்மீது நடித்துக் கொண்டிருந்தார். போதாக்குறைக்கு அந்தகனாகக் கண்களை மூடிக் கொண்டிருக்க வேண்டி வந்தது; பிராம்டர் ஒரு பக்கத்திலிருந்து படித்துக் கொண்டு வர, இவர் பாகத்தை யெல்லாம் பள்ளிக்கூடத்தில் பிள்ளை பாடம் ஒப்புவிப்பதுபோல் ஒப்பித்துக் கொண்டு வந்தார்; ஒரு சந்தர்ப்பத்தில் த்யுமத்சேனனை நோக்கி மற்றொரு நாடகப் பாத்திரம் சொல்ல வேண்டிய பாகத்தை, “த்யுமத்சேனா” என்று ஆரம்பித்து அப்பாத்திரத்திற்குப் பிராம்டர் பிராம்ட் செய்ய, தன் பாகத்தைச் சரியாகப் படியாததனால், அதுவும் தன் பாகம் என்று நினைத்துக் கொண்டு, த்யுமத்சேனனாகிய ஆக்டர், “த்யுமத்சேனா” என்று தன்னையே அழைத்துக் கொண்டு, பேச ஆரம்பித்தார்! பிராம்டாராயிருந்த எனது நண்பருக்குக் கோபம் பிறந்து, “அடே மடையா! (அவர் இதைவிடப்