பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

31


கோர்வையைப் பூர்த்தி செய்துவிடுவார். எந்த வேஷம் தரித்தாலும், தரித்த வேஷத்திற்குத் தக்கபடி வசனங்களை உபயோகித்து, நன்றாய் நடிக்கும் குணம் இவரிடம் அதிகமாயுண்டு. அக்காலத்தில் தமிழ் நாடகங்களில் நடித்த நடர்களில் இவரை ஒரு முக்கியமானவர் என்று கூறல் வேண்டும். இவர் பாரதக் கதையினின்றும் ராமாயணக் கதையினின்றும் அநேக பாகங்களை நாடகங்களாகத் தன் சபையைக் கொண்டு நடிக்கச் செய்தவர். எனக்கு ஞாபகம் இருக்கின்றவரையில், துரௌபதி துகில் உரிவு, கர்ணவதம், பாண்டவர் அஞ்ஞாதவாசம், அபிமன்யு வதம், சீதா கல்யாணம், பாதுகா பட்டாபிஷேகம் தாராசசாங்கம், சித்ராங்கி விலாசம், ராமதாஸ் சரித்திரம், சிறுத்தொண்டர் புராணம் முதலியன இவரால் நடத்தப்பட்ட நாடகங்களில் பிரபல மானவை. கோவிந்தசாமி ராவ் தரித்த முக்கிய வேஷங்கள் தாராசசாங்கத்தில் பிரஹஸ்பதியும், ராமதாஸ் சரித்திரத்தில் நவாபும், பாதுகா பட்டாபிஷேகத்தில் பரதனுமாம். கோவிந்த சாமி ராவ் நவாபாகவோ அல்லது பரதனாகவோ வருகிறார் என்று நோட்டீசுகள் கிளம்பினால் அன்றிரவு நாடகக் கொட்டகை, ஆரம்பத்திற்கு ஒரு மணி முன்பாக நிறைந்து விடும்; கடைசி வகுப்புகளில் டிக்கட்டுகள் கிடைக்காமற் போகும். அப்பாத்திரங்களாக நடிப்பதில் அவ்வளவு பிரசித்தி பெற்றவர். இப்பாத்திரங்களாக நடிக்கும் பொழுது, கொட்டகையில் இருப்பவர்கள் எல்லோரும் கண்ணீர் விடும்படியாக வசனங்களை உருக்கமாக மொழிந்து கல்மன முடையோரையும் கரையும்படி சோகத்துடன் பாடுவார். ஆதிகாலத்தில் தமிழ் நாடகத்திற்கு இவர் ஓர் அணிகலனாக இருந்தாரென்றே நான் உறுதியாய்க் கூறக்கூடும். இவரிடம் நாம் எல்லோரும் போற்றத்தக்க ஓர் அரிய குணம் இருந்தது. அதாவது மற்றக் கம்பெனிகளிலிருந்தது போலல்லாமல், தனது கம்பெனியைச் சேர்ந்த சிறுவர்களை தன்னாலியன்ற அளவு சன்மார்க்கத்தில் இருக்கச் செய்வதில் முயன்று வந்தார். இவ்வளவு நற்குணமிருந்தும், சரஸ்வதியிருக்குமிடத்தில் சாதாரணமாக லட்சுமி தங்குவதில்லை என்கிற பழமொழியின் படி, இவர் நாடகங்களை நடத்துவதனால் பெரும் ஊதியம் ஒன்றும் பெற்றிலர். முதலில் சில வருஷங்கள் கொஞ்சம் தனம் சம்பாதித்த போதிலும், பிறகு அதெல்லாம் செலவாகி,