பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

நாடக மேடை நினைவுகள்


கடனாளியானார். இவரால் தேர்ச்சி செய்யப்பட்ட இவருடைய மாணவர்களும் இவரைவிட்டுப் பிரிந்து வேறு வேறு கம்பெனிகள் ஸ்தாபித்தனர். கடைசியில் இவரது வயோதிகக் காலத்தில் பாலாமணி கம்பெனியில் சூத்திரதாரனாகவும் வேஷதாரியாகவும் நடிக்கும் கதிக்கு வந்து சேர்ந்தார். பாபம்! இவர் க்ஷணதசைக்கு வந்த காலத்தில் தான் எனக்கு நேராகப் பரிச்சயமானார். நான் எழுதிய நாடகங்களில் ஒன்றாகிய லீலாவதி சுலோசனா என்பதை, இவரது மாணாக்கராகிய சுந்தர ராவ் கம்பெனி நடத்திய பொழுது இவர்தான் சூத்திரதாரனாக இருந்து நடத்தினார். பாலாமணி கம்பெனியும் அந்த நாடகத்தை முதல் முதலில் நடத்தியபொழுது இவர் சூத்திரதாரனாக நடத்தினார். இதைப் பற்றிய விவரங்களை அவைகளைச் சொல்ல வேண்டிய சந்தர்ப்பத்தில் பிறகு சொல்லுகிறேன். இவ்விடத்தில் தமிழ் நாடகத்திற்கு இவர் பூர்வ காலத்தில் மிகவும் பாடுபட்டவர் என்பதை எண்ணினவனாய், அவர் மடிந்து இப்பொழுது எங்கிருந்த போதிலும் அவரது ஆன்மா நற்கதியிலிருக்குமாக எனக் கோரி, இப்பகுதியை முடிக்கிறேன்.

ஐந்தாம் அத்தியாயம்

மேற்சொன்ன கோவிந்தசாமிராவுடைய மாணவர்களுள் சிறந்தவர்கள் நான்கு பெயர்கள் - கோனேரி ராவ், சுந்தர ராவ், குப்பண்ண ராவ், பஞ்சநாத ராவ். இந்நால்வரும் அவரால் நாடகமாடுவதில் நன்றாய்ச் தேர்ச்சி பெற்றவர்கள். அன்றிரவு ஆடிய நாடகத்தில் கோனேரி ராவ் என்பவர் ‘அயன் ராஜபார்ட்’ என்று வழங்கப்பெற்ற ராஜ குமாரன் வேஷம் தரித்தார்; சுந்தர ராவ் செட்டி மகளாக வேஷம் பூண்டார்; குப்பண்ண ராவ் ராஜ குமாரனுடைய முதன் மனைவியாகத் தோன்றினார்; பஞ்சநாத ராவ் விதூஷகனாக வேடம் கொண்டார்.

கோனேரி ராவ் சங்கீதத்தில் மிகவும் தேர்ந்தவர்; சாரீரம் மிகவும் சிறந்ததானவர்; சரீரமும் அப்படியேயிருக்கும். இதனால் இவருக்கு எப்பொழுதும் ‘அயன் ராஜபார்ட்’ என்று