பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

37


பாத்திரத்திற்கும் பிரத்தியேகமாகப் பெயர் கிடையாது. ராஜகுமாரன், மந்திரி குமாரன், ராஜா, மந்திரி, செட்டி, செட்டிப் பெண் என்ற அழைக்கப்பட்டார்களே யொழிய ஒவ்வொரு நாடகப் பாத்திரத்திற்கும் பிரத்யேகமான பெயர் கிடையாது! தான் ஆட விரும்பிய மந்திரிகுமாரன் பாத்திரத்திற்குப் புத்திசேனன் என்று பெயர் வைத்தேன். சாப்பிடுகிற வேளை தூங்குகிற வேளை தவிர மற்றக் காலமெல்லாம் எழுதுவதற்கே செலவழித்து மறு வியாழக்கிழமைக்குள் ஏறக்குறைய பாதி நாடகத்தை எழுதி முடித்தேன். இதை எழுதியதில் மனமோஹன நாடகக் கம்பெனி நடர்கள் உபயோகித்த வார்த்தைகளையே பெரும்பாலும் நான் உபயோகித் திருக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. அக்காலத்தில், எனக்கு வயது பத்தொன்பதாயிருந்தபடியால் என் ஞாபக சக்தி அதிகமாயிருந்தது. நான் பார்த்த நாடகக் கதையில் ஒரு முக்கியமான வித்தியாசம் மாத்திரம் உண்டு பண்ணினேன். முன்பே நான் கூறியபடி ராஜகுமாரனது முதல் மனைவி குஷ்ட ரோகியிடம் போனதாக நடித்ததை மாற்றி அரசனது சபையிலிருந்த ஒரு கனவானிடம் களவாகப் போனதாக மாற்றினேன். அந்த வியாழக்கிழமை சாயங்காலம் சபைக்குப் போனபோது, எனது நண்பர்களை யெல்லாம் ஒருங்குசேர்த்து, என்னைச் சுற்றிலும் உட்கார வைத்துக்கொண்டு நான் எழுதியதைப் படித்துக் காட்டினேன். அவர்கள் எல்லாம் மிகவும் நன்றாயிருக்கிறதெனச் சந்தோஷப்பட்டார்கள். இதை இங்கு நான் தற்புகழ்ச்சியாக எடுத்துக் கூறவில்லை. நடந்த உண்மையெல்லாம் எனது நண்பர்களுக்கு நான் கூறவேண்டும் என்று நான் மேற்கொண்ட நியமனத்தின் படிதான் கூறுகிறேன். நான் அன்று தொடங்கி இதுவரையில் எழுதியிருக்கும் சற்றேறக்குறைய அறுபது நாடகங்களில் இது மிகவும் கீழ்ப்பட்டதென்பதே என்னுடைய உறுதியான தீர்மானம். ஆயினும் அச்சமயத்தில் எனக்கு இது மிகுந்த ஆனந்தம் விளைத்தது. முக்கியமாக என் இளைய நண்பர்களெல்லாம் இதைப் புகழ்ந்ததே இதற்கு முக்கியமான காரணமாயிருக்கலாம். அன்றியும் ஒரு தாய், பிறகு எத்தனை புத்திசாலிகளான குழந்தைகளைப் பெற்றபோதிலும், முதலிற்பெற்ற குழந்தை, புத்தியில்லாததாயிருந்தபோதிலும், அவலட்சணமுடையதாயிருந்த போதிலும் அதன்மீது ஒரு