பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

நாடக மேடை நினைவுகள்


விதமான அபூர்வ ஆர்வமுடையவராயிருப்பதுபோல, இந்தப் புஷ்பவல்லி என்னும் நான் முதல் முதல் எழுதிய நாடகத்தின் மீது எனக்கு இன்னாளளவும் ஓர் அன்பு உண்டு. இந்த நாடகமானது இதுவரையில் சில முறையே சுகுண விலாச சபை முதலிய சபைகளில் நடிக்கப்பட்டது.

அன்றைத்தினம் நான் எழுதிய பாகத்தைப் படித்தவுடன் எனது நண்பர்கள், நான் சீக்கிரம் மற்ற பாகத்தையும் எழுதி முடிக்க வேண்டுமென்று வற்புறுத்தினர். இவர்கள் வேண்டுகோளுக்கிணங்கியோ அல்லது முடிக்கவேண்டு மென்னும் என்னுடைய ஆர்வத்தினாலோ உந்தப்பட்டவனாய், வெகு சீக்கிரத்தில் அந்த நாடகத்தை எழுதி முடித்தேன். நான் நாடகத்தை முடிக்கு முன்னமே, சபையின் நிர்வாக சபையில் இன்னின்னார் இன்னின்ன பாத்திரங்கள் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. எனக்கு ஞாபகம் இருக்கிறபடி, கதாநாயகனான ராஜகுகுமாரன் வேஷம், முன்பு நான் கூறிய வரதராஜுலு நாயகருக்குக் கொடுக்கப்பட்டது. அதற்கு முக்கியமான காரணம், அவர் கூடியவரையில் மிகவும் நன்றாய்ப் பாடுவார் என்பதேயாம்.

மந்திரி குமாரனான புத்தி சேனன் பாத்திரம் எனக்குக் கொடுத்தார்கள். கதாநாயகியாகிய புஷ்பவல்லியின் பாகம் ஜெயராம் நாயகருக்குக் கொடுக்கப்பட்டது. புத்திசேனன் மனைவியின் பாகம் சுப்பிரமணிய ஐயர் என்பவருக்குக் கொடுக்கப்பட்டது. அக்காலத்தில் சுகுண விலாச சபையில் ஸ்திரீவேஷம் தரிக்கத்தக்கவர்கள் இரண்டு மூன்று பெயர்களுக்குமேல் கிடையாது. ஆகவே இவர்களிவருக்கும் இரண்டு பாத்திரங்களும் கொடுக்கப்பட்டன. எம்.வை. ரங்கசாமி ஐயங்கார் என்பவருக்கு, புத்திசேனன் தகப்பனாராகிய மந்திரி பாத்திரம் கொடுக்கப்பட்டது. தனபால செட்டி என்ற பாத்திரத்தை (புஷ்பவல்லியின் தந்தை) வெங்கட கிருஷ்ணப் பிள்ளை எடுத்துக் கொண்டார். துரைசாமி ஐயங்கார் என்பவர் விதூஷகனுடைய பாத்திரமாக நியமிக்கப்பட்டார். இந்நாடகத்தின் ஒத்திகைகள் நடத்திய விவரமும் முதல் முதல் பஹிரங்கமாக ஒத்திகை நடத்திய கதையும் இனி எழுதுகிறேன்.

புஷ்பவல்லி என்னும் நாடகத்தை நான் எழுதி முடிப்பதற்கு முன் ஒரு முக்கியமான கஷ்டம் முளைத்தது. நாடகப் பாத்திரங்கள் எல்லாம் தங்கள் தங்கள் வசனத்தை