பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

41


எழுதிக்கொண்டோம். இவர் தமிழ் நன்றாய் வாசித்தவர். சொற்பிழையில்லாமல் பாட்டுகள் எழுதுவார். அன்றியும் சங்கீதத்தில் மிகவும் தேர்ந்தவர். அதற்குச் சில வருஷங்களுக்கு முன்பாகக் காசி விஸ்வநாத முதலியார் என்பவர் அச்சிட்ட டம்பாச்சாரி விலாசத்திற்கு வர்ண மெட்டுகள் எழுதுவதில் மிகவும் உபயோகமாயிருந்தவர். நான் இப்பொழுதிருக்கும் வீட்டிற்கு அருகாமையில்தான் வசித்துக் கொண்டிருந்தார். இவர் இரண்டு மூன்று வருடங்கள் சென்ற பின் காலகதியடைந்தார். அதைக் கேள்விப்பட்ட என் தந்தையாரும் நானும் துக்கப்பட்டோம். இவரை நான், சங்கீதத்திற்கேற்றபடி சாஹித்யம் தமிழிற் செய்ய, எனக்குக் கற்பித்த குருவாகப் பாவிக்கின்றேன்.

மேற்கண்டபடி பாட்டுகளெல்லாம் கட்டியான பிறகு சற்றேறக்குறைய மூன்று மாதங்கள், அந்நாடகத்திற்கு ஒத்திகை நடத்தினோம். வியாழக்கிழமைகளில் சாயங்காலம் மூன்று மணிநேரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆறுமணி நேரமும் ஒத்திகை நடத்துவோம். அக்காலத்தில் நாடகர்களெல்லாம் சிறுவயதுடையவர்களா யிருந்தபடியால் சீக்கிரம் எங்கள் பாடத்தைப் படித்துவிட்டோம். அன்றியும் எங்களில் பெரும்பாலர்க்கு ஞாபக சக்தி நன்றாகவிருந்தது. பிறகு ஒரு நாள் நியமித்துப் பகிரங்கமான ஒத்திகை போடவேண்டு மென்று தீர்மானித்தோம். அதற்கு எங்களுக்குத் தெரிந்தவர்களாகிய நண்பர்களில் சில முக்கியமானவர்களை மாத்திரம் வரவழைத்தோம். இந்தப் பகிரங்க ஒத்திகையானது தம்பு செட்டித் தெருவில் ஜெயராம் நாயகருடைய வீட்டில் நடந்தது; ஏறக்குறைய 50 பெயர் வந்திருந்தனர். எங்களிடம் அப்பொழுது திரைகளே கிடையாது. அரங்கத்தை மறைக்க ஒரு தோம்புதிரை தான் கட்டினோம். உடைகளும் எங்களிடம் அப்போது ஒன்றும் கிடையாது; என் தகப்பனார் கார்டியனாக விருந்த ஒரு ஜமீன்தாரருடைய சரிகை உடுப்புகளில் சிலவற்றை நான் கொடுக்க, அவைகளைத்தான் உபயோகிக்க வேண்டியதாயிருந்தது. இரண்டு ஸ்திரீ வேஷங்களுக்கும் ஜெயராம் நாயகர் வீட்டிலிருந்து இரண்டு புடவைகளைக் கொடுத்தனர். நாற்பது வருடங்களுக்கு முன் நடந்த இந்த ஒத்திகையில் எனக்கு இரண்டு மூன்று சமாச்சாரங்கள்தான் முக்கியமாய் ஞாபகம் இருக்கிறது.