பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

43


அன்றைத்தினம் ஒத்திகையைப் பார்த்த எங்களுடைய நண்பர்களுள் பெரும்பாலர் ஒத்திகை மிகவும் நன்றாயிருந்ததெனப் புகழ்ந்தனர். இது சிறுவர்களாகிய எங்களுக்கு மிகவும் குதூஹலத்தைக் கொடுத்தது.

உடனே சபையின் நிர்வாகசபைக் கூட்டத்தில், நாங்கள் கூடிய சீக்கிரத்தில் விக்டோரியா பப்ளிக் ஹாலில் நாடகங்கள் நடத்த வேண்டுமென்றும், அதற்கு முன் இன்னொரு நாடகம் தயார் செய்து கொண்டு, இரண்டு நாடகமாகப் போட வேண்டும் என்றும் தீர்மானித்தோம். அந்த இரண்டாவது நாடகத்தை நானே எழுதவேண்டுமுன்று எனது நண்பர்கள் வற்புறுத்தினர். நான் ஆலோசித்து, இரண்டாவது நாடகம் பழைய கதையை ஒட்டியதாக இருக்கலாகாது, புதியகதையாக இருக்கவேண்டுமெனத் தீர்மானித்தது, “சுந்தரி அல்லது மெய்க்காதல்” என்னும் நாடகத்தை எழுதத்தொடங்கி கூடிய சீக்கிரத்தில் எழுதி முடித்தேன். இந்நாடகக் கதை என்னால் கற்பிதமானதே; சில இடங்களில் நான் சிறு வயதில் என் தாயாரிடமிருந்து கேட்ட கதைகளின் சந்தர்ப்பங்களை உபயோகித்திருக்கலாம். இருந்தும் மொத்தத்தில் நாடகக் கதை நூதனமான தென்றே சொல்லவேண்டும். இந்த நாடகத்தையும் சில வருஷங்களுக்கு முன் அச்சிட்டிருக்கிறேன். ஆகவே இதைப்பற்றி எனது நண்பர்களுக்கு நான் அதிகமாய்க் கூறவேண்டியதில்லை. இதுவும் இதற்குமுன் நான் எழுதிய புஷ்பவல்லி என்னும் நாடகமும், நான் எழுதியவற்றில் மிகவும் கீழ்ப்பட்டவை என்றே கூற வேண்டும். ஆயினும் அக் காலத்தில் இதை எழுதி முடித்து எனது நண்பர்களுக்கு நான் வாசித்துக் காட்டிய பொழுது, அதை அவர்கள், மிகவும் புகழ்ந்தார்கள். உடனே நிர்வாகசபையில் இன்னின்னார் இன்னின்ன வேடம் தரிக்க வேண்டுமெனத் தீர்மானிப்பதற்குக் கூட்டம் கூட்டப்பட்டது. அக்கூட்டத்தில் நடந்த ஒரு முக்கியமான சமாச்சாரம் என் மனத்தில் இன்னும் அதிகமாய் மறக்க முடியாதபடி அழுந்தியிருக்கிறது.

‘சுந்தரி அல்லது மெய்க்காதல்’ என்னும் நாடகத்தை எழுதும் பொழுதே சபையின் அங்கத்தினருள் நாடக மேடை ஏற இச்சையுள்ளவர்களுக்குள் இன்னின்னாருக்கு இன்னின்ன பாத்திரம் கொடுத்தால் நன்றாயிருக்குமெனத் தீர்மானித்தே அவரவர்கள் திறமைக்கு ஏற்றபடி நாடகத்தை எழுதிக்கொண்டு