பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

45


இருபத்தெட்டு வயதுடைய ஒருவர் பதினெட்டு வயதுடைய ஒரு நாடகப் பாத்திரத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது என்று ஆட்சேபித்தவன்; என்னுடைய ஐம்பத்தொன்பதாம் வயதில் சுமார் பதினேழு பதினெட்டு வயதுடைய இளம்பிராயம் பொருந்திய நாடகப் பாத்திரங்களையே இன்னும் நடிக்க வேண்டுமென்று, அந்தரங்கமாய் இச்சைப்படுகிறேன்! நாடகமேடைகளின் கெடுதிகளுள் இது ஒரு முக்கியமானதென்பதற்கு ஐயமென்ன? இதன்பொருட்டே நமது பூர்வீகர்கள் நாடக மேடையைப் பெரும்பாலும் வெறுத்தனர் போலும்.

முடிவில் நிர்வாக சபையார் நான் கூறியதை ஒப்புக் கொண்டு எனக்கே அந்த நாடகப் பாத்திரத்தைக் கொடுத்தனர். இதனால் மேற்சொன்ன வரதராஜுலு நாயகருக்கு மிகவும் கோபம் பிறந்தது. பிறகு அவர் சபையைவிட்டுச் சீக்கிரம் நீங்கியதற்கு இது ஒரு முக்கியமான காரணமாயிருந்ததென நம்புகிறேன். பட்சபாதமின்றி இப்பொழுது இவ்விஷயத்தைப் பற்றி யோசிக்குமிடத்து, அப்பாத்திரத்தை என்னைவிட அவர் நன்றாய் நடத்தியிருப்பார் என்று சொல்வதற்குக் கொஞ்ச மேனும் ஏதுவில்லாவிட்டாலும், அம்மாதிரியான ஆட்சேபணை கூறி அவர் மனத்தைப் புண்படுத்தியது தவறென்றே எனக்குத் தோற்றுகிறது. அச்சமயம் அப்படி நான் செய்தது தவறென்று நான் ஒப்புக்கொள்வதைவிட, வேறு அவருக்கு நான் பிராயச்சித்தம் செய்ய அசக்தனாயிருக்கிறேன்.

நாடகப் பாத்திரங்களெல்லாம் பகிர்ந்து கொடுக்கப்பட்ட பிறகு, அவரவர்கள் தங்கள் தங்கள் பாகங்களை எழுதிக் கொண்டு விரைவில் படிக்க ஆரம்பித்தார்கள். ஒரு வாரத்திற் கெல்லாம் ஒத்திகை ஆரம்பித்துவிட்டோம். இதை இவ்விடம் ஏன் எழுதுகிறேன் என்றால், தற்காலத்தில் நாடகங்களெல்லாம் அச்சிடப்பட்டு, ஒவ்வொருவனுக்கும் ஒரு புஸ்தகம் கொடுக்கப்பட்ட போதிலும் நாடக தினம் வரையில் பாடம் படிக்காதவர்கள் வெகு பெயர்கள் இருக்கின்றனர். அக் காலத்திலோ பென்சிலினால் எழுதப்பட்ட ஒரு காபியை வைத்துக்கொண்டு அத்தனை பெயரும் அவரவர் பாகங்களை அவரவர்களாக எழுதிக்கொண்டு, குருட்டுப் பாடம் செய்து ஒரு வாரத்திற்கெல் லாம் ஒத்திகை ஆரம்பித்து விட்டோம் என்பதைக் குறிக்கவே. அக்காலத்தில் எங்களுக்கிருந்த ஊக்கம் தற்காலத்தில் வெகுவாய் இல்லை யென்றே நான் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது.