பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/654

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

639


லெல்லாம் மிகவும் புத்தி சாதுர்யமுடைய எனது நண்பர் தாமோதர முதலியார் அவர்கள் என் உதவிக்கு வந்தார். ஒரு மின்சார பாட்டரியை (battery) என் உடைக்குள் மறைத்து வைத்து அதன் கம்பியை என் தலையில் அணிந்திருந்த டோபாவுக்குள் கொண்டு போய், நெற்றிக்கெதிராகத் தொங்கும்படியாக, அதன் முனையில் ஒரு சிறு மின்சார பல்ப் (bulb) ஏற்பாடு செய்தார். மறைவாக இருந்த அந்த பாட்டரியை முடுக்கினால், அந்த வெளிச்சம் தோன்றும்படி ஏற்பாடு செய்தார். இக்காட்சி நடக்கும்பொழுது, எல்லாம் இருட்டியவுடன், இவ்விசையை நான் முடுக்க, என் நெற்றியில் இரு கண்களுக்கு மத்தியில் இந்த எலெக்டிரிடிக் வெளிச்சம் தோன்றிய போது, ஹாலிலுள்ள ஜனங்க ளெல்லாம் இதைக் கண்டு ஆச்சரியமும் சந்தோஷமுமுற்ற வராய்க் கரகோஷம் செய்தனர். அச்சமயம் அக் கரகோஷம் என்னைச் சார்ந்ததல்ல, எனது நண்பர் தமோதர முதலியார் புத்தி சாதுர்யத்தைச் சார்ந்ததென்று அவருக்கு அதை என் மனத்தில் அர்ப்பணம் செய்தேன். உடனே லைம் லைட்டைக் கொண்டு முதலில் முகத்திலும், பிறகு எனது உடல் முழுவதும் ஜோதியுண்டானதுபோல் செய்யப்பட்டது. இப் புத்தாவதார நாடகத்தில் இக் காட்சியானது மிகவும் நன்றாயிருந்ததென எல்லோரும் புகழ்ந்தது என் நினைவிற்கு வந்து, இப்பொழுதும் எனக்குச் சந்தோஷத்தைத் தருகிறது.

ஜனங்கள் இந்நாடகத்தில் பலரும் மெச்சிய மற்றொரு காட்சி, கௌதமர் முன்பாக நடன மாதர் நடனஞ் செய்யுங்கால், திடீரென்று பலகணியோரம் வைத்திருந்த யாழின் மூலமாகத் தேவர்கள் அவருக்கு அவர் இவ்வுலகில் அவதாரம் செய்த வேலையைக் கவனிக்கும்படி சங்கீதத்தின் மூலமாகத் தெரிவிக்கின்ற காட்சியாகும். இந்தக் காட்சிதான் ஒத்திகைகளில் எனக்கு மிகவும் கஷ்டத்தைக் கொடுத்தது. இக் காட்சியில் நடனமும் சரியாயிருக்க வேண்டும், சங்கீதமும் சரியாயிருக்க வேண்டும், ஆக்டிங்கும் சரியாயிருக்க வேண்டும். இம் மூன்றையும் தக்கபடி சரிப்படுத்த இக்காட்சியை எத்தனை முறை ஒத்திகை செய்து பார்த்தேன் என்று என்னால் கணக்கிட்டுச் சொல்ல முடியாது.