பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/658

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



643

நாடக மேடை நினைவுகள்




நான் தற்கால மும் நடிக்க விரும்பும் நாடகங்களில் இது ஒன்றாகும்.

இவ் வருஷத்தில் எங்கள் சபையின் அங்கத்தினருள் சில முக்கியமானவர்கள் மரித்தனர் என்று நான் துக்கத்துடன் எழுத வேண்டியவனாயிருக்கிறேன். முதலில் பல ஆண்டுகளாக எங்கள் சபைக்குப் பிரசிடெண்டாயிருந்து, அதற்காகப் பலவிதத்திலும் முயற்சி எடுத்துக் கொண்ட டி.வி. சேஷகிரி ஐயர் அவர்கள் காலகதியடைந்தனர். இவர் மரணமடைவதற்குச் சில தினங்களுக்கு முன் நான் இவரைப் போய்ப் பார்த்தபொழுது, “உன்னுடைய புத்தாவதாரம் எப்பொழுது வரப்போகின்றது?” என்று மிகவும் ஆவலுடன் கேட்டது எனக்கு நினைவிற்கு வருகிறது. என் துர் அதிர்ஷ்டத்தால் அதைப் பாராமலே அவர் பரலோகம் சென்றார். இவர் ஞாபகச்சின்னமாக ஏதாவது சபையில் ஏற்படுத்த வேண்டுமென்று சபையார் தீர்மானித்து, பணம் சேகரித்து, அவருடைய உருவப் படம் ஒன்றைச் சபையின் இருப்பிடத்தில் வைத்திருக்கின்றனர்.

அன்றியும் பல வருடங்களாக எங்கள் சபையில் கிரீன் ரூம் டைரெக்டராக உழைத்து வந்த என் பழைய நண்பராகிய வெங்கடாசல ஐயரும் இவ் வருஷம் சிவலோகப் பிராப்தியடைந்தார். இவர் பொருட்டும் ஒரு பொதுக் கூட்டம் கூடி, சபையின் துக்கத்தைத் தெரிவித்து, இவரது ஞாபகச் சின்னமாக இவரது உருவப் பட மொன்றைச் சபையில் வைக்க வேண்டுமென்று தீர்மானித்தோம். இப்பிரயத்தனமானது சீக்கிரம் முடிந்து, இவரது படம் ஒன்று எங்கள் சபையின் ஹாலை அலங்கரிக்கிறது.

மேலும், இவ் வருஷம் எங்கள் சபையில் சற்றேறக் குறைய ஆரம்ப முதல் அங்கத்தினராயிருந்த வி. எதிராஜுலு செட்டியார் வைகுண்டப் பிராப்தி அடைந்தார். இவர் எங்கள் சபையின் தெலுங்குப் பிரிவிற்காகப் பல ஆண்டுகள் கண்டக்டராயிருந்து அதை முன்னுக்குக் கொண்டு வந்தவர்; அதன் அபிவிருத்திக்காக அதிகப் பணமும் செல விட்டவர்; எங்கள் சபையில் கடைசியில் பல வருடங்கள் பொக்கிஷதாரராகவிருந்து, மிகவும் ஒழுங்காகக் கணக்குப் பார்த்தவர். இவரும் இவ்வருடம் இறந்தது எங்கள் சபையின் துர்அதிர்ஷ்ட வசமாம்.