பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்


கோஷாக்களாக இருக்க வேண்டுமென்று தீர்மானித்து, ஒரு பச்சை வர்ணமுடைய கொசுவலையை எதிரில் கட்டி வைத்தோம்!.

முன்சொன்ன ஜமீன்தாருடைய உடுப்புகளில் சிலவற்றை இப்பொழுதும் உபயோகித்த போதிலும், இந்த ஒத்திகைக் கென்று இரண்டு புதிய உடைகள் தைத்தோம், சாடின் (Satin) பட்டில் தைத்துச் சரிகைக் கோண்டு வைக்கப்பட்டிருந்தது. அதைவிட நூறுமடங்கு விலையுள்ள உடைகளைப் பின் வந்த நாடகங்களில் நான் தரித்திருக்கிறேன்; இருந்தும் முதல் முதல் அந்த உடையைத் தரித்த பொழுது எனக்குண்டான உவகை, பிறகு நூற்றிலொரு பங்குகூடப் பெற்றிலேன்! எந்த அனுபவமும் முதல் முதல் கிடைப்பதற்குச் சமானமாகாது, சந்தோஷத்திலும் சரி-துக்கத்திலும் சரி.

அன்றைத்தினம் ஒத்திகையின் நாடகப் பாத்திரங்களைப் பற்றி எனது நண்பர்கள் கொஞ்சம் அறிய விரும்புவார்கள் என்று நினைக்கிறேன். முக்கியமான கதாநாயகன் வேடம் பூண்டது, ரங்கசாமி ஐயங்கார். இவர் என்னைவிடச் சிறு வயதுடையவர். சாரீரம் மிகவும் சுத்தமானது. இவருடைய பாட்டைப் போன்றது ஆண் மக்களுள் பிற்காலம் ஒன்றிரண்டு பெயரிடம்தான் கேட்டிருக்கிறேன். நடிப்பதில், முதலில் சங்கோசம் அதிகமாக உடையவராயினும், நாளடைவில் மிகவும் தேர்ச்சி பெற்றார். அக்காலத்தில் முக்கியமாக நாடகங்களில் கானத்துக்கே அதிக உன்னதப் பதவி கொடுத்திருந்ததால், இவருக்குக் கதாநாயகன் வேஷம் கொடுக்கப்பட்டது. ஆயினும் இவர் ஒத்திகை நடத்துங்கால் ஒரு விஷயத்தில் மிகவும் கஷ்டப்பட்டார். கதாநாயகனான இவர் கதாநாயகி வேடம் பூண்ட ஜெயராம் நாயகரை முத்தமிட வேண்டிய சந்தர்ப்பம் வந்தது. அந்தப் பாகம் ஒத்திகை நடத்தும் பொழுதெல்லாம், முகத்தைச் சுளித்துக் கொண்டு மிகவும் சங்கோசப்படுவார், உடம்பெல்லாம் நடுங்கிப்போய்! சரியாக எப்படி முத்தமிடுவது என்பதை நான் அவருக்குப் பன்முறை கற்பிக்க வேண்டியிருந்தது! இவ்விஷயமாகப் பன்முறை அவரை நாங்கள் எல்லாம் ஏளனம் செய்வோம். இன்னொரு விஷயம் இவரைப் பற்றி எனது நண்பர்கள் அறிய வேண்டும். இவர் தகப்பனார் வயதான லௌகீகப் பிராம்மணர்.