பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/692

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1929ஆம் வருஷம் கடைசியில், நான் சுகுண விலாச சபை ஸ்தாபித்தது முதல் செய்யாத காரியம் ஒன்றைச் செய்தேன். அதாவது நான் மதுரை டிராமாடிக் கிளப்பில் நாடகமாடினேன்! இதற்குக் காரணம், நான் சற்று விவரமாய்த் தெரிவிக்க வேண்டியவனாயிருக்கிறேன். நான் முன்பே எனது நண்பர்களுக்குத் தெரிவித்தபடி, எனது அத்யந்த நண்பரான கே. நாகரத்தினம் ஐயர், உத்யோக சம்பந்தமாக மதுரைக்கு மாற்றப்பட்டார். அதன்பேரில் அவர் எங்கள் சபை நாடகங்களில் சென்னையில் நடிப்பது கஷ்டமாயிற்று; அவர் நடிக்கமாலிருக்கவே நானும் நடிப்பது அசாத்தியமாயிற்று. இதைப்பற்றி நான் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும்போது, ஒரு நாள் நாகரத்தினம் ஐயரிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது; அதில் மதுரையில் இருக்கும் டிராமாடிக் கிளப்பார், தன்னையும் என்னையும் அவர்கள் கிளப் நடத்தும் நாடகங்களிரண்டில் ஆடும்படியாகக் கேட்கிறதாகவும், போய் வர என் ரெயில் செலவெல்லாம் அவர்கள் கொடுப்பார்களென்றும், இதற்கு எப்படியாவது நான் சம்மதிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். இதைப் பார்த்தவுடன் இன்ன பதில் அனுப்புவதென்று தெரியாமல் திகைத்தேன். ஒருபுறம் எனது அத்யந்த நண்பருடன் மறுபடியும் நாடக மேடையில் ஆட வேண்டுமென்னும் விருப்பம் மற்றொரு புறம் சுகுண விலாச சபையைத் தவிர மற்ற சபை யொன்றில் எப்படி நான் ஆடுவது? முன் பின் தெரியாத மற்ற ஆக்டர்களுடன்