பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

நாடக மேடை நினைவுகள்


கடைசிவரையில் நான் அவரைப் பார்த்தவனன்று. அவர் எங்கே எப்படி உட்கார்ந்திருந்தார் என்பதையும் கவனித்தவன் அன்று. இதை நான் இங்கு குறிப்பதற்கு முக்கியமான காரணம் ஒன்றுண்டு. அது, மேடையின் மீதேறி நாடகங்களில் நடிக்க விரும்பும் எனது சிறிய நண்பர்களுக்கெல்லாம் மிகவும் உபயோகப்படும் என்று நான் உறுதியாய் நம்புகிறபடியால் அதைப்பற்றி விவரமாய்க் கூற விரும்புகிறேன்.

அன்று முதல் இன்று வரை, நான் கணக்கிட்டபடி சுமார் ஐந்நூற்றுச் சில்லரை நாடகங்களில் நடித்திருக்கிறேன். இவற்றுள் ஒன்றிலாகிலும் அரங்கத்தின் எதிரில் யார் எங்கே இருக்கிறார்கள் என்றுகூடக் கவனித்தவனன்று. அப்படிக் கவனியாததற்கு இரண்டு முக்கியக் காரணங்களிருக்கின்றன; முதலாவது, அப்படிக் கவனிப்பேனாயின், அந்த க்ஷணம், நான் பூண்டிருக்கும் வேஷதாரியாயில்லாமல், வெறும் சம்பந்தம் ஆகி விடுகிறேனல்லவா? ஒருவன் அமலாதித்யனாக அரங்கத்திலிருக்கும்பொழுது, அவனது சொந்த தந்தையோ, தாரமோ, நண்பனோ, அரங்கத்தின் எதிரில் யார் உட்கார்ந்திருக்கிறது என்று கவனிப்பானோ? அவனது எண்ண மெல்லாம் அரங்கத்தின் மீதிருக்கும். அவனது நாடகத் தந்தையோ, சிற்றப்பனோ, காதலியாகிய அபலையோ தாயாராகிய கௌரிமணியோ, நண்பனான ஹரிஹரனோ எங்கிருக்கிறார்கள் என்றல்லவோ கவனிக்க வேண்டும்? மற்றொரு காரணமும் முக்கியமானதே; மேடையில் நடிக்கும் ஒரு நாடக பாத்திரம் அரங்கத்தில் யார் யார் வந்திருக்கிறார்கள் அவர்கள் தன்னைப்பற்றி என்ன பேசிக் கொள்கிறார்கள் தான் நடிப்பது நன்றாயிருக்கிறது என்று நினைக்கிறார்களா, அல்லது நன்றாக இல்லையென்று எண்ணுகிறார்களா என்று கவனிக்கத் தொடங்கினால், உடனே அவனுக்கு, அரங்கப் பீதி அல்லது பயம் உண்டாகும். புதிதாய் அரங்கத்தின்மீது ஏறும் எனது இளமையுடைய நண்பர்கள் அநேகர். “சார்! நான் போனவுடன், என் சிநேகிதன் (அல்லது தகப்பனார், தாயார்) அரங்கத்தின் பேரில் எதிரில் உட்கார்ந்ததைப் பார்த்து விட்டேன். உடனே எனக்குப் பயமாகி விட்டது. கை கால் உதற ஆரம்பித்துவிட்டது. என் பாடத்தை மறந்துவிட்டேன்” என்று எத்தனையோ முறை எனக்குக் கூறியிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நான் கூறும் பதில் என்னவென்றால்,