பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

நாடக மேடை நினைவுகள்


என் தகப்பனார் தான் பார்த்த நாடகத்தைப்பற்றி மிகவும் சந்தோஷப்பட்டார் என்பதற்கு முக்கிய நிதர்சனம் என்ன வென்றால், அவர் மறுநாளே எங்கள் சபை அங்கத்தினர்க்கு, மறுஞாயிற்றுக் கிழமை தினம் ஒரு டீ பார்ட்டி (Tea Party) கொடுத்தார் என்பதே. அந்த பார்ட்டிக்கு, அன்றைத் தினம் வந்திருந்த எனது நண்பர்களையும் வரவழைத்தார். இவ்வாறாக சென்னையிலுள்ள தமிழ் அபிமானிகளாகிய பல கனவான்களுக்குச் சபையின் பெருமையைப் பரவச் செய்தார். இதன் மூலமாக சபையின் அங்கத்தினரும் அதிகமாயினர். ஆகவே சுகுண விலாச சபை, சிறு குழவியாயிருந்த பொழுது, அதை அன்புடன் ஆதரித்து வளர்த்தவர்களுக்குள், என் தந்தையை முக்கியமானவர் என்று கூற வேண்டும் என எண்ணுகிறேன்.

மேற்சொன்னபடி இரண்டு நாடகங்களுக்குப் பகிரங்க ஒத்திகை நடத்தி, பார்த்தவர்களுடைய சம்மதத்தைப் பெற்ற நாங்கள், கூடிய சீக்கிரத்தில் விக்டோரியா பப்ளிக் ஹாலில் அந்நாடகங்கள் நடத்த வேண்டுமென்று தீர்மானித்தோம்.

அக்காலத்தில் சபையின் அங்கத்தினர் பெரும்பாலும் பள்ளிக்கூடத்தில் வாசிக்கும் சிறுவர்களாயிருந்தபடியால், எங்களது படிப்புக்கு விக்னம் வராதபடி, பரீட்சைக்குப் போகும் ஒவ்வொருவரும் பரீட்சை காலத்துக்கு மூன்று மாதம் முன்பாகசபையின் கூட்டங்களுக்கு வரக்கூடாது என்று ஒரு சட்டம் ஏற்படுத்திக் கொண்டோம் என்று முன்பே தெரிவித்திருக்கிறேன். அந்தச் சட்டத்தின்படி மறுபடி மூன்று மாத காலம் நான் சபைக்குப் போகாதிருந்தேன். இதற்குள்ளாக விக்டோரியா ஹாலில் மேற்சொன்ன இரண்டு நாடகங்களையும் ஆடுவதற்கு ஏற்பாடுகள் செய்தோம்.

அவ்வாறு செய்வதில் எங்களுக்கு ஏற்பட்ட முதல் கஷ்டம் என்னவென்றால், நாடகங்களுக்கு வேண்டிய திரைகள் எல்லாம் இல்லாமையே. இலவசமாகத் திரைகள் வாடகைக்கு இப்பொழுது கிடைப்பது போல் அப்பொழுது கிடையாது. அன்றியும் அப்படிக் கிடைப்பதாயினும் எங்களுக்கு வேண்டிய திரைகள் அகப்படுவது கஷ்டமாயிருந்தது. ஆகவே எப்படியாவது, எங்களுக்கு வேண்டிய திரைகளைப் புதிதாய்ச் செய்து கொள்ள வேண்டுமென்று தீர்மானித்தோம். இதற்குக்