பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

நாடக மேடை நினைவுகள்


கொண்டிருந்த, டுவார்ட் என்னும் பரங்கிக்காரனைக் கொண்டு அவைகளை எழுதி வைத்தோம். எங்கள் சபையின் காரியதரிசியின் வீட்டு மேல்மாடியில்தான் அவைகள் எழுதப்பட்டன. இன்னின்ன படுதாக்கள் இருக்க வேண்டுமென்று நாங்களே தீர்மானித்து, டிராப் படுதா, தர்பார் படுதா, அரண்மனை உட்புறப் படுதா, தோட்டப் படுதா, காட்டுப் படுதா, தெருப் படுதா, ஜெயில் படுதா என்று மேற்கண்ட இரண்டு நாடகங்களுக்கும் அதி அவசியமான படுதாக்கள் எழுதி வைத்தோம். அன்றாடம் எவ்வளவு வேலையாகி வருகிறதென்று மிக்க ஆவலுடன் போய்ப் பார்த்து வருவோம். மனிதனுடைய ஞாபக சக்தியென்பது ஒரு விதத்தில் ஆச்சரியகரமானதே! நாற்பது வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட படுதாக்களைப் பற்றி எல்லா விஷயமும் நன்றாய் எனக்கு ஞாபமிருக்கிறது; நான்கு தினத்திற்கு முன் படித்த புஸ்தககத்தின் பெயரும் சில சமயங்களில் இப்பொழுது மறந்துவிடுகிறேன்! எங்கள் டிராப் படுதாவில், கற்றறிந்த வர்களுடைய நாடகசபை என்று காண்பிப்பதற்காக, கலா சங்கத்தின் இருப்பிடமாகிய செனெட் ஹவுஸை (Senate House) எழுதி, தமிழ் நாடகத்தை ஒரு மாதுருவமாக உருவகப்படுத்தி வரைந்து, ‘நற்குணத்தின் பலன் நற்குணமே’ என்று பொருள் படும்படியான ஒரு ஆங்கிலப் பழமொழியை எங்கள் பிருதாக வரைந்துவைத்தோம். இந்தப் படுதா அநேக வருஷம் எங்கள் சபையின் முதல் படுதாவா உபயோகிக்கப்பட்டு, நாளாவர்த்தியில் மிகவும் பழமையடைந்து கிழிந்து போய்விட்டது; மற்றப் படுதாக்களும் சுமார் பத்து அல்லது பன்னிரண்டு வருஷங்கள் உழைத்து ஜீரணமாகிப் போயின.

சேதுபதி அவர்கள் அளித்த முன்னூறு ரூபாயும் இதற்குச் சரியாகப் போகவே, நாடக உடுப்புகளுக்கு என்ன செய்வது என்று ஆலோசிக்க ஆரம்பித்தோம். இதிலும் கருணைக் கடவுள் எங்களுக்கு வழி காண்பித்தார். தஞ்சாவூர் அரண் மனையைச் சார்ந்த, சரபோஜி மகாராஜாவின் வம்சத்திலுதித்த ஒருவர், பிரின்ஸ் பாட்சா ராம் சாயப் என்பவர் சென்னைக்கு வந்தார். வெங்கடகிருஷ்ண நாயுடு என்னும் எங்கள் சபை நிர்வாகக் கூட்டத்தின் அங்கத்தினர் (இவரைப் பற்றி முன்பே எனது நண்பர்களுக்குக் கொஞ்சம் கூறியிருக்கிறேன்) இவருக்கு சிநேகமானார். பாட்சாராம் சாயப் தஞ்சைக்குத் திரும்பிப் போன