பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மொழி பெயர்ப்பு நாடகங்களான சாகுந்தலை, மாளவிகாக்னிமித்ரம், விக்ரமோர்வசி, ரத்னாவளி முதலிய வடமொழி நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்த்தார். சேக்சுபியர் ஆங்கிலத்தில் எழுதிய 'Hamlet' என்ற நாடகத்தை அமலாதித்யன் என்றும், 'As you Like it' என்ற நாடகத்தை 'விரும்பிய விதமே' என்ற பெயரிலும் 'Cymlealine' என்ற நாடகத்தை 'சிம்ஹௗநாதன்' என்றும், 'Merchant of Venice' என்ற நாடகத்தை 'வாணீபுரத்து வாணிகன்' என்றும், ‘Macbeth'என்ற நாடகத்தை 'மகபதி' என்றும், பிரஞ்சு மொழியிலுள்ள 'The knavery of Scalphin' என்ற நாடகத்தை 'காளப்பன் கள்ளத்தனம்' என்றும் தமிழில் மொழி பெயர்த்தார்.

சுகுண விலாச சபையின் நிறுவனராகவும், நாடக ஆசிரியராகவும், நடிகராகவும், நாடக இயக்குநராகவும் விளங்கிய பம்மல் சம்பந்த முதலியார், தாம் படைத்த அனைத்து நாடகங்களையும் அச்சிட்டு வெளியிட்டார்.

பம்மல் சம்பந்த முதலியார் பல்துறைப் புலமை மிக்கவர். நாடகங்கள் எழுதியதுடன், ‘பேசும்பட அனுபவங்கள்', ‘தமிழ்ப் பேசும் படக்காஷி', ‘கதம்பம்', ‘தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை', ‘காலக் குறிப்புகள்', ‘சிவாலயங்கள்-இந்தியாவிலும் அப்பாலும்', ‘சிவாலய சிற்பங்கள்', ‘சிவாலய உற்சவங்கள்', ‘சுப்பிரமணிய ஆலயங்கள்', ‘தீட்சிதர் கதைகள்', ‘ஹாஸ்யக் கதைகள்', ‘ஹாஸ்ய வியாசங்கள் ‘முதலிய நூல்களையும் எழுதியுள்ளார்.

சிறுத்தொண்டர் நாடகத்தில் சிறுத்தொண்டர் மகனான சீராளனாகவும், அரிச்சந்திரன் நாடகத்தில் அரிச்சந்திரன் மகனான லோகிதாசனாகவும் யாரும் நடிக்க அக்காலத்தில் முன்வரவில்லை. எனவே பம்மல் சம்பந்த முதலியார் அவருடைய மகனை அவ்விரு பாத்திரங்களையும் ஏற்று நடிக்கச் செய்தார். நாடகத் துறையில் அவருக்கிருந்த மிகுந்த ஈடுபாட்டை இதன்வழி அறியலாம்.

சம்பந்த முதலியார் நாடகக் கலையை வளர்க்கும் முகத்தான் ‘Indian Stage' (இந்திய நாடக மேடை) என்ற ஆங்கில இதழை நடத்தினார். தமிழ் நாடகத் தோற்றத்தை விளக்கும் வகையில் ‘நாடகத் தமிழ்’ என்ற நூலை எழுதினார். ‘நான் கண்ட நாடகக் கலைஞர்கள்', ‘என் சுயசரிதம்', ‘நடிப்புக் கலையில் தேர்ச்சி பெறுவது எப்படி?’ முதலிய நூல்கள் அவருடைய நாடக அனுபவங்களோடு தொடர்புடைய நூற்களாகும்.

பம்மல் சம்பந்த முதலியார் தமக்கு ஏற்பட்ட நாடக அனுபவங்களைத் தொகுத்துப் பிற்காலத் தலைமுறைக்குப் பயன்படும் வகையில் 'நாடக மேடை நினைவுகள்' என்ற நூலை எழுதினார். இந்நூல் ஆறு தொகுதிகளைக் கொண்டது. நாடக மேடை நினைவுகள் முதல் தொகுதி 1932இலும், இரண்டாம் தொகுதி 1933இலும், மூன்றாம் தொகுதி 1935இலும், நான்காம் தொகுதி 1936இலும், ஐந்தாம் தொகுதி அதே ஆண்டிலும், ஆறாம் தொகுதி 1938இலும் வெளிவந்தன.