பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

நாடக மேடை நினைவுகள்


யிருக்கிறது. சில சமயங்களில் அதை மறந்து நடந்து, அதற்காகப் பிறகு பிராயச்சித்தம் செய்கிறேன்! அவர் அன்று எனக்குக் கூறிய இப்புத்தியை, எனது இளைய நண்பர்கள் நன்றாய் ஆராய்ந்தறிந்து, அதன்படி நடந்து வருவார்களாயின் அதனால் பெரும் நன்மையைப் பெறுவார்களென்று உறுதியாய் நம்பி இதை இங்கு வரையலானேன்.

ராஜாசர் சவலை ராமசாமி முதலியார், தான் பிரசிடென்டாக ஒப்புக்கொண்ட பிறகு, ராவ்பஹதூர் ரங்கநாத முதலியாரை வைஸ் பிரசிடென்டாக ஒப்புக்கொள்ளும்படி கேட்கிறது தானே என்று சொன்னார். அதைச் சந்தோஷத்துடன் ஒப்புக் கொண்டு, என் தந்தையிடம் தெரிவித்து, அவருக்கும் ஒரு கடிதம் வாங்கிக்கொண்டு அவரைப் போய்க் கண்டேன். இவர் இன்னாரென்று எனது இளைஞரான நண்பர் அறியாதிருக்கலாம். ஏனெனில் இவர் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னமே காலமாய் விட்டார். அக்காலம் தென் இந்தியாவில் கற்றறிந்தவர்களுக்குள் இவர் முதலாக மதிக்கப்பட்டவர். சென்னை கலாசாலையில் கணிதப் புலவராக நியமிக்கப்பட்ட போதிலும், ஆங்கில பாஷை, தர்க்க சாஸ்திரம், சரித்திரம் முதலிய பல சாஸ்திரங்களிலும் பெரிய நிபுணர். தமிழிலும் நன்றாகக் கற்றுணர்ந்தவர். கச்சிக்கலம்பகம் என்னும் அரிய நூலை இயற்றியுள்ளார். இவருக்கு அக்காலம், பிரின்ஸ் ஆப் கிரேட்யூயேட்ஸ் (Prince of Graduates) என்று பெயர். அபாரமான ஞாபக சக்தியுடையவர். ஏதாவதொன்றை இரண்டு முறை படித்தால் அப்படியே ஒப்புவிக்கும் திறமை வாய்ந்தவரென்று சொல்லுவார்கள். இவர் என்னை என் சிறுவயது முதல் அறிவார். என் தகப்பனார் முதன் முறை என்னை இவர் முன் அழைத்துக்கொண்டு போனபோது, என்னை நீதிமஞ்சரியிலுள்ள ‘கற்கைநன்றே கற்கைநன்றே, பிச்சைபுகினும் கற்கை நன்றே, கல்லா ஒருவன் குலநலம் பேசுதல் நெல்லினுட் பிறந்த பதராகும்மே’ என்பதை ஒப்பிக்கச்சொன்னார். அப்படியே நான் ஒப்பித்தபொழுது, “தம்பி, இது எப்பொழுதும் ஞாபகம் இருக்கட்டும் என்று சொன்னது, இப்பொழுது என் மனத்தை விட்டகலவில்லை; நேற்றுதான் இவர் அதை எனக்குக்கூறியது போலிருக்கிறது. இவரும், என் தகப்பனாருடைய காதகிதத்தைப் படித்துப் பார்த்து, எங்கள் சபையின் வைஸ் பிரசிடென்டாக ஒப்புக் கொண்டார்.