பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

நாடக மேடை நினைவுகள்


விக்டோரியா பப்ளிக் ஹாலினுடைய இரண்டு கேட்டுகளிலும், சிறு பந்தல்கள் போட்டு கம்பங்களுக்கெல்லாம் தழைகளைக் கட்டி, கொடிகள் நாட்டி அலங்கரித்தோம். ஆட்ட தினம் சாயங்காலம் 4 மணி முதல் 9 மணி வரை வாசிக்கும்படியாக பாண்டுக்காரர்களுக்கு ஏற்பாடு செய்தோம். (சபையானது பிரபலமடைந்த பிறகு இவைகளை யெல்லாம் பெரும்பாலும் நிறுத்திவிட்டோம்.) ஆட்டம் சரியாக 9-மணிக்கு ஆரம்பிக்க வேண்டுமென்று தீர்மானித்து, ஆக்டர்கள் அவரவர்கள் வீட்டில் சாப்பிட்டுவிட்டு வருவதென்றால் நேரமாகுமென்றெண்ணி, நாடக தினம் ஆக்டர்களுக்கெல்லாம் ராஜா சர் சவலை ராமசாமி முதலியார் சத்திரத்தில், ஒரு பிராம்மணனிடம் சாப்பாட்டிற்கு ஏற்பாடு செய்து சாயங்காலம் 4 மணிக்கெல்லாம் எல்லோருக்கும் சாப்பாட்டை முடித்தோம். உடனே ஆக்டர்களை யெல்லாம் டவுன் ஹாலுக்கு நேராக அழைத்துக் கொண்டு போனேன். போனதும் எல்லா ஆக்டர்களுக்கும் முதலில் ஸ்திரீ வேஷதாரிகளுக்கும், பிறகு ஆண் வேஷதாரிகளுக்குமாக, எல்லோருக்கும் க்ஷவர கல்யாணமாயிற்று! பிறகு முகங்களையெல்லாம் கழுவிக் கொண்டு, ஒவ்வொருவராக அப்பு வென்பவனெதிரில் போய் உட்கார்ந்தோம். இந்த அப்பு என்பவனைப் பற்றி முன்பே கொஞ்சம் எனது நண்பர்களுக்குக் குறித்திருக்கிறேன். இவன் எங்கள் சபை ஆரம்ப முதல், தான் இருந்த நாள்வரை, மனப்பூர்வமாக சபையின் நன்மைக்காக மிகவும் பாடுபட்டு உழைத்த தொழிலாளியானது பற்றி, இவனைக் குறித்து எனது நண்பர்களுக்குச் சற்று விவரமாய்க் கூற விரும்புகிறேன். ஆக்டர்களுக்கு வர்ணம் தீட்டுவதில் காலஞ்சென்ற சுப்பராயாச்சாரியிடம் தேர்ந்த மனிதன் இவன். நாடக தினம் காலையில், ஒரு கட்டை வண்டி பேசி, எங்கள் திரைகள், உடுப்புகள் முதலியவை களையெல்லாம், அதன் மீது ஏற்றிக்கொண்டு விக்டோரியா ஹாலுக்குப் போவான். அவைகளை இரண்டு ஆட்களைக் கொண்டு நாடகமாடும் மேல்மாடிக்குக் கொண்டு போவதன் முன் நான் அங்கு போய்ச் சேர்வேன். பிறகு அவனை அழைத்து இன்னின்ன திரை இன்னின்ன இடத்தில் கட்ட வேண்டும் என்று குறிப்பிடுவேன். நான் சொன்னபடி கொஞ்சமேனும் தவறில்லாமல் பன்னிரண்டு மணிக்குள்ளாகக்