பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

73


கட்டி முடிப்பான். (தற்காலம் இதே வேலையை முடிக்க, 5 ஆட்கள் தேவையாயிருக்கிறது.)

பிறகு வீட்டிற்குப் போய்ச் சாப்பிட்டு விட்டு வந்து எங்கள் உடுப்புகளை யெல்லாம் கிரமமாக எடுத்து வைத்து, முகத்திற்கு வேண்டிய வர்ணங்களை யெல்லாம் சித்தம் செய்வான். அக்காலத்தில் இப்பொழுது இருக்கும் கிரீஸ் பெயின்ட் (Grease Paint) முதலிய சவுகர்யங்களே கிடையாது. அரிதாரம், செந்தூரம், கரிப்பொடி முதலியனதான் உபயோகிக்கப் பட்டன. அரிதாரம் முகத்தைக் கெடுக்குமென்று, முதலில் விளக்கெண்ணெயைத் தொட்டு நன்றாய்ப் பூசி விடுவான். பிறகு அரிதாரத்தை வஸ்திரகாயம் செய்து ஒரு துணியில் கட்டி, மெல்ல அதை முகத்தில் சமமாகத் தட்டி கையினால் ஒழுங்காகத் தேய்த்து விடுவான். பிறகு செந்தூரத்தைக் குழைத்து, கன்னங்களுக்கும், உதடுகளுக்கும் தீட்டி விடுவான். புருவத்திற்கு, கரிப்பொடியைக் குழைத்து ஈர்க்கினால் கோடுகள் கிழிப்பான். எல்லாம் முடிந்ததும் அபிரேக்கை வஸ்திரகாயம் செய்து, ஒரு முடிச்சாகக் கட்டி அதனால் முகம் முழுவதும் தட்டிவிடுவான்! இதுதான் அக்காலத்தில் வேஷம் தீட்டும் விதம். இப்பொழுது எல்லாம் மாறி விட்டபடியால், எனது நண்பர்கள் இப் பூர்வீக வழக்கம் அறிந்திருப்பது நலமென்றெண்ணி, இதை விரிவாகவுரைத்தேன்.

மேலே விவரித்தபடி ‘சுந்தரி’ நாடகத்திலுள்ள எல்லா ஆக்டர்களுக்கும் முகத்தில் வர்ணம் பூசியபின், அப்பு ஒருவனாக, பெண் வேடம் பூண்டவர்களுக்கெல்லாம் தலையில் டோபா கட்டி தலைவாரிப் பின்னல் போட்டான்; ஆண் வேடம் பூண்டவர்களுள் வேண்டியவர்களுக்குத் தலைமயிரைச் சுருட்டி விட்டான். இந்த வேலையைத் தற்காலத்தில் ஒரு நாடகத்தில் நான்கு கிரீன் ரூம் டைரக்டர்களும், ஒன்றிரண்டு உதவி செய்பவர்களுமாகச் செய்கிறார்கள். அக்காலத்தில் அவன் ஒருவனே செய்து முடிப்பான். தற்காலத்திலுள்ள விமரிசையும் ஒழுங்குமில்லா விட்டாலும் அவன் ஒருவனாக அத்தனைத் துரிதமாகச் செய்து முடித்தது மிகவும் மெச்சத்தக்கதே. ஸ்திரீ வேஷதாரிகளெல்லாம் நான் முன்பு குறித்தபடி, அவரவர்கள் வீட்டிலிருந்து புடவைகள் கொண்டு வந்து கட்டிக் கொண்டார்கள். சற்றேறக்குறைய எட்டு மணிக்கெல்லாம் எல்லா ஆக்டர்களும் தயாராகி