பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

நாடக மேடை நினைவுகள்


கலாசாலையில் மாணாக்கனாகப்படித்துக் கொண்டிருந்தார்; பாட்டு சுமாராக இருக்கும்; ஆயினும் உருவத்தில் மிகுந்த அழகு வாய்ந்தவர். இவரது சுய பாஷை தெலுங்கு; இருந்தும் தமிழ் நன்றாகப் பேசுவார்; குரல் மாத்திரம் திடமானதல்ல. ஆகவே விக்டோரியா ஹாலில், இவர் பேசினது கடைசி வரைக்கும் கேட்கவில்லையென்கிற குறை இருந்தது. என்னுடைய அபிப்பிராயம் இவர் ஸ்திரீ வேஷத்திற்கு லாயக்கானவரே யொழிய ஆண்வேஷத்திற்கு ஏற்றவர் அல்ல என்பது. அப்படியே எங்கள் மூன்றாவது நாடமாகிய லீலாவதி - சுலோசனாவில் இவருக்கு ஸ்திரீ வேஷம் கொடுத்தேன்; இதன் பிறகு மீசை கொஞ்சம் நீளமாய் வளர்ந்து போக, வீட்டில் அதை எடுத்து விடுவதற்கு ஆட்சேபணை செய்கிறார்கள் என்று சொல்லி, இவர் ஸ்திரீ வேஷம் தரிக்க ஆட்சேபித்துவிட்டார். கதாநாயகியாக இந்நாடகத்தில் நடித்தவர் சுகுண விலாச சபையின் முதல் மெம்பராகிய ஜெயராம நாயகரே. இவர் முந்திய நாடகத்தில் நடித்ததைவிட, இந் நாடகத்தில் மிகவும் சாதுர்யமாக நடித்தார் என்பது என்னுடைய அபிப்பிராயம்; எங்கள் சபையில் நான் முன்பே குறித்தபடி பாட்டு நன்றாய்ப் பாடக் கூடியவராகிய எம்.வை. ரங்கசாமி ஐயங்கார், மந்திரி வேடம் பூண்டார். நான் மந்திரிகுமாரனான புத்திசேனன் வேடம் பூண்டேன். அ. சுப்பிரமணிய அய்யர், மந்திரிகுமாரன் மனைவியாகிய பானுமதி வேடம் தரித்தனர். இவரது பாட்டுகள் மிகவும் நன்றாயிருந்தன வென்று நாடகத்திற்கு வந்திருந்தவர்கள் கொண்டாடினார்கள். எம். துரைசாமி ஐயங்கார், விதூஷகன் வேடம் பூண்டார். இவர் நாடகம் பார்க்க வந்தவர்களை மிகவும் நகைக்கச் செய்தார். மற்ற ஆக்டர்களைப் பற்றி நான் ஒன்றும் விசேஷமாகக் கூறுவதற்கில்லை. இந்நாடகம் சுந்தரியைவிட, கொஞ்சம் சிறிதானபடியால், அதைவிட சீக்கிரம் முடிந்தது; அதாவது ஏறக்குறைய இரண்டு மணிக்கெல்லாம் முற்றுப் பெற்றது. நாடகம் முடிந்தவுடன், சீமைக்குப் போய் பாரிஸ்டர் பட்டம் பெற்ற ஒருவரும், ஒரு டாக்டரும் ஆங்கிலேய பாஷையில் சபையின் இந்த இரண்டு நாடகங்களைப் பற்றிப் புகழ்ந்து சில வார்த்தைகள் கூறினர். அது ஆக்டர்களாகிய எங்களுக்கெல்லாம் மிகவும் சந்தோஷத்தைத் தந்தது. எங்களைப் புகழ்ந்தார்களே என்று யோசித்தோமே யொழிய,