3. சோவியத் மண்ணிலே முதல் வேலை.
நாங்கள் டாஸ்கன்ட் ஒட்டலுக்குள் சென்றதும் எங்கள் நுழைவுச் சீட்டுகளைப் பெற்றுக்கொண்டார்கள் என்று சொன்னேன் அல்லவா? ஒட்டலில் ஏன் இதை வாங்கிக் கொண்டார்கள் என்று நினைத்தேன்? அப்படி எண்ணினேனே தவிர அதை யாரிடமும் சொல்லிக்கொள்ளவில்லை. ஆனால் நாங்கள் அவ்வூரை விட்டுப் புறப்படுவதற்கு முதல் நாளே, நுழைவுச்சீட்டுகள் திருப்பிக் கொடுக்கப்பட்டன. எங்கள் பெயர், முகவரி முதலிய தகவல்களை அதற்குரிய பேரேட்டில் பதிந்துகொண்டார்கள். எல்லாம் இரண்டொரு வினாடிகளில் முடிந்தன.
எங்களுக்குத் தனித்தனியே அறைகள் ஒதுக்கினர். உரிய அறைக்கு, லிப்ட் மூலம் போய்ச் சேர்ந்தோம். இரண்டொரு வினாடிகளில் பெட்டிகள் வந்து சேர்ந்தன. ஒவ்வொரு அறையிலும் குளியல் அறையும் இருந்தது. தண்ணிரும் வெந்நீரும் தனித்தனிக் குழாய்களில் வந்தன. அலுப்புத் தீரக் குளித்தோம். இரவு, பலமான நல்ல உணவு. காய்கறிச் சாப்பாட்டுக்காரனாகிய எனக்குக்கூட நல்ல சாப்பாடு; நிறைய பழவகைகள். சாப்பாட்டிற்குப் பிறகு, நாங்கள் மூவரும் துணையின்றித் தனியே உலாவச் சென்றோம்,