59
'ஆம். அப்படியே! நாங்களே அடையாளம் காணத் திகைக்கிற அளவிற்கு வளர்கிறது. ஆனால் இவ்வளவும் திட்டமிட்ட வளர்ச்சி. எப்படியோ எங்கோ புகுந்து கூடாரம் அடிக்கும் வளர்ச்சியன்று. எல்லா நவீன வசதிகளும் அமைய வளர்கிறது நகரம்’ என்பது அவர்கள் விளக்கம்.
பரந்த நகரமாம் மாஸ்கோவின் மக்கள்தொகை என்ன என்ற ஐயம் எழுந்தது எங்களுக்கு. எழுபது இலட்சம் மக்கள் குடியிருக்கிறார்கள் அந் நகரில் என்று தெரிந்துகொண்டோம். நாள்தோறும் பல இலட்சம் மக்கள் மாஸ்கோ வழியாகப் போவதாகவும் அறிந்தேன்.
மாஸ்கோவின் வரலாறு எவ்வளவு நீண்டது என்று தெரிந்துகொள்ள விரும்பினோம்.
'எட்டு நூற்றாண்டுகளுக்கு முன் மாஸ்கோ ஒரு சிற்றுார். இன்று உலகப் பெரு நகரங்களுள் ஒன்று. இது ஏழு குன்றுகளின்மேல் அமைந்துள்ளது. முற்காலத்தில் அக்கம்பக்கத்துச் சிற்றரசர்களின் படையெடுப்பிற்குப் பலமுறை ஆளாகி நலிந்து மீண்டும்மீண்டும் தளிர்த்த சிற்றுார் இது. பன்னிரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இது நகரமாக அமைக்கப்பட்டது. அப்போதும் அரண்மனை உட்பட எல்லாக் கட்டடங்களும் மரத்தால் ஆனவை. பின்னர், பதினைந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே கற்கட்டடங்களும் இப்போதுள்ள கிரெம்லினும் எழுந்தன. கிரெம்லின் என்றால் கோட்டை என்று பொருள். அக் கோட்டையி