7.மாஸ்கோ பல்கலைக்கழகம்
எட்டு நூற்றாண்டுகளுக்குமுன் ஒரு சிற்றுாராயிருந்தது மாஸ்கோ. இன்றே உலகப் பெருநகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்நகரின் வழியே சென்றோம். அகன்ற தெருக்களை வியந்தவர் ஒருவர். குறுகிய தெருக்களும் உண்டு. இந்நகரில் உயர்ந்த கட்டடங்களை இமையாது பார்த்தவர் ஒருவர். அழுக்கில்லா நிலையை வியந்தவர் மற்றோருவர். கண்ட இடங்களில் குறுக்கும் நெடுக்கும் போகாத மக்களின் கட்டுப்பாட்டையும் ஒழுங்கையும் வியந்தவர் பிறிதொருவர். மோட்டார் ஒட்டிகள் யாரும் ஹார்ன் அடிக்கவில்லையே' என்று வியப்போடு கேட்டோம். அடிக்கக்கூடாது என்பது சட்டம். நகர எல்லைக்குள் ஹார்ன்' அடிப்பது தவறு. அது சட்டம் மட்டுமன்று; நடைமுறையுங்கூட என்ற விளக்கம் கிடைத்தது.
தன்னிச்சை கொண்டலையும் மாக்களையும் காண முடியாது, நகரங்களுக்குள். ஆடு மாடுகள் பண்ணைகளில் இருக்கும். நகரத் தெருக்களிலே திரியா. மக்களாவது திரிவார்களா? மாட்டார்கள். போவோர் வருவோர் எல்லோரும் நடைபாதையின் மேலேயே. தெருவைக் கடக்க? கடப்பதற்குரிய இடங்களில் மட்டுமே, தெருவில் ஒரு பக்கத்திலிருந்து மற்றோரு பக்கத்திற்குப் போவார்கள். தவறி, வேறு இடத்தில் கடந்துவிட்டால்? காவல் புரியும்