66
பெரிய சாய்வு நாற்காலிகளில் அமர்ந்தோம். எங்களை விருந்தாளிகள் பட்டியலில் பதியும் வேலையை ஒட்டல் அலுவலர் மேற்கொண்டார். பாஸ்போர்ட்டுகளைக் கேட்டார். கொடுத்துவிட்டு உட்கார்ந்திருந் தோம். இதற்குள் எங்கள் பெட்டிகள் உள்ளே கொண்டுவரப்பட்டன, எங்களைச் சரிபார்க்கச் சொன்னார்கள். சரிபார்த்து, எல்லாம் வந்துவிட்டன என்றோம். நாங்கள் போவதற்கு முன்னே எங்கள் பெட்டிகள் போய்விட்டன உரிய அறைகளுக்கு, பதிவுச் சடங்கு முடிந்தபின், எங்கள் அறைகளுக்கு "லிப்ட் மூலம் சென்றோம். இங்கும் ஆளுக்கு ஒர் அறை ஒதுக்கியிருந்தனர். எல்லா வசதிகளும் பொருந்திய சுத்தமான அறையாக இருந்தது ஒவ்வொன்றும்.
பகல் உணவு நேரம் வந்தது. மூவரும் சேர்ந்து உணவருந்தும் கூடத்திற்குச் சென்றோம். மொழி பெயர்ப்பாளர் எங்களோடு கலந்துகொண்டார்; இரஷிய மொழி தெரியா எங்களுக்கு உதவி செய்வதற்காக. எல்லா நாளும் எல்லா வேளையும் மொழி பெயர்ப்பாளர் எங்களோடு இருந்து உண்டார். இதுவே அவர்கள் ஏற்பாடு.
உணவு அருந்தும் கூடத்தில் ஒரு காலி மேசையைத் தேடினோம். நால்வரும் அங்கு அமர்ந்தோம். பரிமாறுகிறவர் வந்தார். என்ன கொண்டுவர” என்று கேட்டார். நிர்வாகியை அழைத்து வரும்படி பதில் வந்தது. நிர்வாகி வந்தார். நிர்வாகி நல்ல ஆங்கிலம் பேசினார்.