68
உணவின் மேல் நாட்டஞ் சென்றது. எனக்கு மரக்கறி உணவு வந்தது. மற்றவர்களுக்குப் பிற உணவு வந்தது. வயிறு நிரம்ப உண்டோம். மனம் நிறைந்து எழுந்தோம்.மொழிபெயர்ப்பாளர், எங்களைக் கலந்து வேண்டியவற்றிற்கு உத்தரவு கொடுத்தார். தவறாமல் இதைச் செம்மையாகச் செய்தார்.
மரக்கறி சூப் வந்தது. சூடான சாறுமட்டுமில்லை. கிண்ணி நிறைந்த சூப்பில் காய்கறித் துண்டுகள் கலந்து இருந்தன. காய்கறிச் சாலடு. பச்சைக் காய்கறிகளையும் கீரைகளையும் நறுக்கி வேக வைக்காமல் கொடுக்கும் உணவிற்குப் பெயர் சாலடு. அதன்மேல் வேண்டிய அளவு உப்பையும் மிளகு பொடியையும் தூவி உண்ணவேண்டும். அடுத்ததாக அரிசிச் சோறு எங்களுக்குக் கிடைத்தது; காய்கறிக் குழம்பும் கிடைத்தது. சமைத்த காய்கறிகள் தனியே. தமிழ்நாட்டு உணவைப்போல் காரசாரமாக இல்லை. மற்றபடி நல்ல உணவே. நல்ல தயிர் கிடைத்தது. மாவு கலவாத வெண்ணெய்; சத்துள்ள ரொட்டி; கோப்பை நிரம்ப ஐஸ்கிரீம்; பல பழவகைகள்; காப்பி தேநீர் இத்தணையும், கிடைத்தன தாராளமாக. இரஷியர்கள் உணவின் போது, ஒரு புட்டித் தயிரைக் குடித்துவிடுகிறர்கள். சோவியத் மண்ணில் இருந்தவரையில், மரக்கறியையே உண்ணும் எனக்குக்கூட, உணவுக்குறை இல்லை. காரணம் நான் விருந்தாளி. ஆகவே தனிக் கவனத்திற்குரியவன். அடுத்த காரணம், எங்கள் மொழிபெயர்ப்பாளர் முன்யோசனை கொண்டவர்;