பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73

நீங்களே முடிவு செய்யுங்கள். ஒவ்வொரு வகுப்பறையிலும் ஒரு நாள் என்ற கணக்கில் தங்கிச் செல்வதென்றால் அறுபது ஆண்டுக் காலம் ஆகும் இங்கிருந்து வெளியேற என்று பதில் கிடைத்தது. வியப்பின் எல்லைக்குச் சென்றோம்.
"குழந்தையாக நுழைந்தால் மணி விழாவிற்கே வெளியேறலாம்" என்றேன். கொல்லென்று சிரித்தார்கள்.
"21,900 வகுப்பறைகளா?" என்று பெருமூச்சு விட்டார் எங்களோடு வந்தவர்.
வகுப்பறைகள் மட்டும் 22,000. இங்கேயே 6000 மாணவர்கள் தங்கிப் படிக்கின்றனர். அவர்களுக்கான அறைகள் ஆயிரக்கணக்கில். சோதனைக் கூடங்கள் பலப்பல. 500 பேர் அமரக் கூடிய சொற்பொழிவுக் கூடங்கள் பல. நூலகங்கள் எத்தனையோ. விளையாட்டுக் கூடங்களும் பலப்பல. கலைக்கூடமும் உண்டு. மொத்தம் 45,000 அறைகள், பெரிதும் சிறிதுமாக என்றார்.
எங்கள் வியப்பையும் மலைப்பையும் ஒருங்கே முகங்கள் காட்டின.
"இவ்வளவே மாஸ்கோ பல்கலைக்கழகம் என்று நினைக்காதீர்கள். இதன் சில பகுதிகள் இன்னும் நகரத்தின் மத்தியில் பழைய கட்டடத்தில் உள்ளன" என்று மேலும் வியப்பூட்டினர் எங்களுக்கு.
"அப்படியானால் எத்தணை ஆயிரம் பேர் படிக்கிறார்கள்? என்ன படிக்கிறார்கள்? இக் கேள்விகள் எழுகின்றனவா?