உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

97

'முப்பத்தொன்பது ஆசிரியர்கள் உள்ளனர். மற்ற அலுவல்களைப் பார்க்க இருபது பேர் உள்ளனர்’ என்ற பதில் கிடைத்தது.

மேல் மாடியிலிருந்து எட்டிப் பார்த்தோம். அழகியதும் அடர்ந்ததுமான தோட்டம் தென்பட்டது. 'இத் தோட்டம் மாணவர்கள் பயிர் செய்ததா? பள்ளிக்கூடப் பணியாளர் பயிர் இட்டதா?’ என்று தெரிந்துகொள்ள விரும்பினோம்.

'இது பள்ளிக்கூடத்தைச் சேர்ந்தது. பயிர் இடுவதோ மாணவர்கள். தோட்டப் பயிர் பயிற்சியும் பாட முறையில் சேர்ந்ததுதான். நகரத்தின் நடுவில் இதைவிடப் பரந்த இடம் கிடைக்காது உள்ள இடம் அத்தனையையும் நன்கு பயன்படுத்திச் சிறந்த பலன் பெற்றிருக்கிறார்கள் மாணவர்கள். பரவல் பயிருக்கு இடமில்லை; எனவே செறிவுப் பயிர் இட்டிருக்கிறார்கள். இதுவும் போதாது என்று பயிர்ப் பண்ணைகளுக்குச் சென்று பயிற்சி பெற்று வருகிறார்கள்.'

இப்பள்ளிக்கூடத்திற்கு விளையாடுமிடம் எங்கே? அதுவே குறை. அடுத்துள்ள, விளையாட்டரங்கம் இவர்களது விளையாடுமிடம். பத்து நிமிடங்களில் அவ்விடத்திற்கு நடந்து போய்விடலாம் என்பதை அறிந்தோம். நகரப் பள்ளிகள் பலவற்றிற்குத் தனித்தனி விளையாட்டுத் திடல்கள் இல்லை. பொது விளையாட்டரங்கங்களே பள்ளிகளுக்குப் பயன்படுகின்றன.