பக்கம்:நான் கண்ட நாடகக் கலைஞர்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3

வாய்ந்தவர். சாதாரணமாக பூனா மஹாராஷ்டிரர்கள் அணியும் தோவத்தியையும் நீண்ட சட்டையையும் அதன் பேரில் ஒரு சால்வையும் அணிவது அவர் வழக்கம். தலையில் மஹாராஷ்டிரர்கள் அணியும் சரிகை முகப்புடைய அணியை அணிவார். தஞ்சாவூர் அரசர்களைப்போல் கல் மீசை வைத்திருந்தார். இவர் நடத்திய தமிழ் நாடகங்களுள் முக்கியமானவை :-- ராம்தாஸ் சரித்திரம், பாதுகா பட்டாபிஷேகம், திரௌபதி வஸ்திராபரஹணம், தாராசசாங்கம், கோபிசந்து, கர்ணவதம், அபிமன்யு, சிறுத்தொண்டர் முதலியன. இதில் வேடிக்கை யென்னவென்றால் இந்த நாடகங்களில் ஒன்றேனும் தமிழில் அக்காலத்தில் அச்சிலும் கிடையாது. ஓலை ஏட்டிலும் கிடையாது. பிறகு இவர் எப்படி அந்நாடகங்களை நடத்தினார் என்று நீங்கள் கேட்கலாம். அதற்குப் பதில் ஒரு புதிய நாடகத்தை எடுத்துக்கொண்டு எப்படி ஒத்திகை நடத்தினார் என்று நான் கூறுவதால் நீங்கள் அறிந்துகொள்வீர்கள். ஒரு புதிய நாடகத்தை அவர் ஆடவேண்டுமென்று தீர்மானித்தால் அக்கதையை ராமாயணத்திலிருந்தோ, பாரதத்திலிருந்தோ மற்ற எவ்விடத்திலிருத்தோ அதைப் படித்துவிட்டு தனது நடிகர்களை எல்லாம் தனது எதிரில் உட்காரவைத்துக் கொண்டு அக்கதையை விரிவாக அவர்களுக்குத் தெரிவிப்பார். பிறகு தனக்குத் தகுந்த ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு மற்றவர்களுக்கு அவரவர்களுடைய சரீர சாரீரங்களுக்கு ஏற்றபடி பகிர்ந்து கொடுப்பார். அதன்பின் நடக்க வேண்டிய ஒவ்வொரு காட்சியின் சாராம்சங்களை விரிவாகக்கூறி அதில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் பேசவேண்டிய விஷயங்களைப் பற்றியும் நடக்கவேண்டிய சந்தர்ப்பங்களைப்பற்றியும் தன்னால் இயன்ற அளவு விவரமாய் எடுத்துரைப்பார். பிறகு இரண்டாம், மூன்றாம் ஒத்திகைகளில் எல்லா பாத்திரங்களையும் அவர்கள் பாகத்தின்படி வசனத்தைப் பேசச் சொல்வார். அவர்கள் பேசும்போது ஏதாவது திருத்தவேண்டிய விஷயங்கள் இருந்தால் திருத்துவார். அதன் பிறகு கடைசி ஒத்திகைகளில் அவர்கள் பாடவேண்டிய பாட்டுகளை மஹாராஷ்டிரம், தெலுங்கு, தமிழ் நூல்களிலிருந்து எடுத்து அவர்களுக்குக் கற்பிப்பார். அவ்வளவுதான்.

இனி அவர் சாதாரணமாக தமிழ் நாடகங்களை நடத்தியதைப் பற்றி கொஞ்சம் கூறுகிறேன். நாடகமானது ஒன்பது மணிக்கு ஆரம்பமாகும் என்று பிரசுரித்தபோதிலும் அரைமணி முக்கால் மணி பொறுத்துத்தான் துவக்கமாகும். அந்த துவக்கமும் திரைக்குப் பின்னால் தான். முதலில் கோவிந்த