பக்கம்:நான் கண்ட நாடகக் கலைஞர்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

திரு. V. T. செல்லம்

இவர் முழுப் பெயர் V. தணிகாசலம். இவர் கவர்ன்மெண்ட் ஆபீஸில் உயர்தர உத்தியோகத்தில் இருந்தவர். அங்கிருக்கும் போதே பூனாவில் ஒரு தமிழ் நாடகசபையை ஏற்படுத்தினார். அதில் தானே முக்கிய பாகங்களை எடுத்துக் கொண்டார். மற்றவர்களுக்குக் கற்பிப்பதிலும் நல்ல திறமை யுடையவர். என்னுடைய பல நாடகங்களை என் அனுமதி பெற்று நடத்தி வந்தார். ஆயினும் இவரை நான் முதலில் சந்தித்தது, பம்பாயில். அங்கு நான் மனோகரா பேசும் படத்தில் புருஷோத்தமராக நடிக்கப் போயிருந்தபோது முதலாளிகள் தாங்கள் முதலில் தேர்ந்தெடுத்த ஒருவர் மனோகரனாக நடிக்க சரியாயில்லை என்று சென்னை மாவட்டத்திற்கு வந்து பரிசோதித்து திரு. செல்லம் அவர்களை பொறுக்கி யெடுத்து பம்பாய்க்கு அழைத்து வந்தார்கள். நானும் செல்லத்துடன் கலந்து பேசி இவர் தகுந்தவர் என்றே கூறினேன். அதன்மீது மனோகராவில் என்னுடன் மனோகரனாக செல்லம் நடித்தார். நடிப்பு மிகவும் நன்றாயிருந்தது, ஆயினும் சங்கீதம் என்னைப் போலத்தான்.

இவர் பூனாவில் இருந்தபோது ஹிந்தி பாஷையிலும் பன்முறை நடித்ததாகக் கேள்விப்பட்டேன், இவருடைய முக்கியமான குணம் என்னவென்றால் நல்ல ஞாபகசக்தியே. பிறகு பல வருடங்கள் பொறுத்து இவரை நான் மறுபடியும் சந்தித்து பேசிய போது அவர் என் நாடகங்களில் மனோகராவிலும் அமலாதித்யனிலும் உள்ள பெரிய பாகங்களை அப்படியே ஒரு வார்த்தையும் தவறாது ஒப்புவித்தது ஞாபகமிருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பாக இவர் முழு சன்யாசம் வாங்கிக் கொண்டார். இன்னும் பல வருடம் இவர் அந்த ஆஸ்ரமத்தில் வசிக்க வேண்டுமென்று ஈஸ்வரனை பிரார்த்திக்கின்றேன்.

திரு. சுவர்ணலிங்கம் அவர்கள்

இவர் சிங்களத் தீவில் பிறந்து வளர்ந்தவர். சிறுவயதிலேயே நாடகமாட வேண்டுமென்று இச்சைகொண்டவர். ஆயினும் 1911-வது வருடம் சுகுணவிலாச சபை சிங்களத்திற்குப் போய் நாடகங்கள் ஆடியதை பார்த்தபின் அந்த இச்சை மேலிட்டவராய் 1913-வது வருடம் இலங்கை சுபோதவிலாச சபை என்னும் நாடகசபையை அங்கு ஸ்தாபித்ததில் மிக்க முயற்