பக்கம்:நான் கண்ட நாடகக் கலைஞர்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

என்மீதுள்ள அன்பேயாம் என்று நினைக்கிறேன், இவர் தற்காலத்தில் தன் முதிர்வயதிலும் பல நாடக சபைகளுக்கு போஷகராயிருந்து அவைகளை உற்சாகப்படுத்தி வருகிறார். ஒருமுறை சிங்களத்து நாடக அபிமானியாகிய ஒரு பெரியார் 'இந்தியாவில் தமிழ்நாட்டில் சம்பந்த முதலியார் எப்படி பெயர் எடுத்தாரோ அப்படியே இலங்கையில் சொர்ணலிங்கம் பெயர் பெற்றிருக்கிறார்" என்று கூறியதாக கேள்விப்பட்டிருக்கிறேன். இவர் இன்னும் பல்லாண்டு வாழ்ந்து தமிழ் நாடகத்தின் பெருமையை இலங்கைவாசிகள் நன்றாய் அறியும்படி விடா முயற்சிகொண்டு உழைக்கவேண்டுமென்று எல்லாம்வல்ல ஈசன் அருளைப் பிரார்த்திக்கின்றேன்.

திரு. M. S. முத்துகிருஷ்ணன்

இவர் சென்னையில் பிறந்தவர், சிறுவயதிலேயே நாடக சபையில் சேர்ந்து பால பார்ட்டுகள் நடித்து கொஞ்சம் பெயரெடுத்து பிறகு பெரியவனான பிறகு தானே ஒரு நாடகக் கம்பெனியை ஏற்படுத்தி நடத்தினார். ஜெகன்னாத ஐயர் பாய்ஸ் கம்பெனியில் நடித்தவர்களுள் ஒருவர். இவர் பிறகு பெயர் பெற்ற பல நடிகர்களுக்கு சிறு வயதில் நடிப்புக் கலையை நன்றாக கற்பித்தவர். பிறகு பேசும்படம் தோன்றியபோது பல பேசும் படங்களில் நடித்துள்ளார். இவர் எனக்கு முக்கிய உதவி செய்தது என்னவென்றால் எனது பிராம்மணனும்---சூத்திரனும் நாடகத்தின் பெயரை மாற்றி அதை அப்படியே 33 நாட்கள் நடத்தினார். இதை நான் இங்கு குறிப்பதற்கு முக்கிய காரணம் நாடகத்தின் பெயர்களிலும் சூட்சுமம் இருக்கிறது என்று இதைப் படிப்பவர்களுக்கு அறிவிக்க வேண்டு மென்பதாம், நான் எழுதிய நாடகங்களுள் பிராம்மணனும் சூத்திரனும் என் அபிப்பிராயத்தில் ஒரு முக்கிய நாடகமாம், அப்படியிருந்தும் அப்பெயரை கேட்டவர்கள் பயந்து அதன் அருகில் போகாமல் விட்டனர். இருவர் உள்ளம் என்று பெயரை மாற்றியுடனே இது பிரகாசிக்க ஆரம்பித்தது. ஆங்கிலத்தில் "பெயரில் என்னயிருக்கிறது ரோஜாவுக்கு எப் பெயர் வைத்தாலும் அதன் மணம் குன்றாதல்லவா" என்று ஒரு பழமொழி உண்டு . இவர் நடித்த முக்கிய நாடகப் பாத்திரங்கள் ஜெயபாலன், கண்டிராஜன், மனோகரன், கோபாலன் B.A., கம்ஸன், கங்காதரன் முதலியவைகளாம். இவர் தன் உடல் நலத்தை ஜாக்கிரதையாக பார்த்துக்கொண்டு தற்போது வயதாகியும் நல்ல தேகஸ்திதியில் இருக்கிறார்.