பக்கம்:நான் கண்ட நாடகக் கலைஞர்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

சாமிராவ் தனது இஷ்டதேவதையாகிய ஸ்ரீராமர், சாமுண்டீஸ்வரி இவர்கள் ஸ்தோத்திரத்தைப் பாடுவார். பிறகு டிராப் படுதாவுக்கு முன் வந்து நிற்க விதூஷகன் வந்து அவருடன் பேசுவான். இவ்விருவர்களுடைய சம்பாஷணையினால் இன்ன நாடகத்தின் கதை என்று சபையோருக்கு விளங்கும். இதெல்லாம் ஆன பிறகு தான் சரியான நாடகம் ஆரம்பமாகும். நாடகம் முடிவதற்கு சுமார் 5 மணி நேரமாகும். இதில் இன்னொரு வேடிக்கை யென்ன வென்றால் ஒரே நாடகத்தை இரண்டு முறை ஒருவர் பார்ப்பதினால் சங்கீதப் பாட்டுகள் ஒரே மாதிரி இருந்த போதிலும் நடிகர்கள் பேசும் வசனம் எவ்வளவோ மாறி வரும். இதற்குக் காரணம் முன்பே கூறியுள்ளேன். இவரது நாடகங்களில் விதூஷகன் வேடம் பூணும் பஞ்சநாதராவ் சற்றேறக் குறைய எல்லாக் காட்சி களிலும் தோன்றி சமயோசிதமாய் விகடவார்த்தைகளை நாடக பாத்திரங்களுடன் பேசுவான். நாடகம் முடிந்தவுடன் மகிஷாசுர மர்த்தினி திரைவிடப்படும். அதற்கும் மேடையின் மேல் நிற்கும் எல்லா நடிகர்களுக்கும் திரி ஒன்று ஏற்றப்பட்ட ஒரு கலியாண பூசணிக்காய் சுற்றி உடைப்பது வழக்கம்.

இனி கோவிந்தசாமிராவ் அவர்கள் நடித்த பாத்திரங்களைப் பற்றி கொஞ்சம் கருதுவோம், எனக்கு ஞாபகம் இருக்கும் வரையில் பாதுகாபட்டாபிஷேகத்தில் இவர் பரதனாக நடித்ததும் கோபிசந்தில் கோபிசந்தாக நடித்ததும் ராம்தாஸில் நவாப்பாக நடித்ததும் தான் ஜனங்களின் மனதைக் கவர்ந்தன என்பேன். இந்த முக்கிய பாத்திரங்களில் இவர் சோக பாகத்தை நடிக்கும் போதெல்லாம் சபையில் நாடகத்தைப் பார்க்க வந்திருக்கும் பெரும்பாலோர் கண்ணீர் விட்டு அழுவதை நான் பார்த்திருக்கிறேன். அவ்வளவு உருக்கமாக நடிப்பார். ராம்தாஸில் நவாப்பாக ஐதராபாத்தில் ஒருமுறை இவர் நடித்ததற்காக அதைப் பார்த்த பல மகம்மதிய தனவான்கள் இவருக்குப் பொற்பதக்கம் அளித்து கீன்காப் சால்வை முதலிய மரியாதைகள் செய்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். தாராசசாங்கத்தில் இவர் பிரகஸ்பதியாக நடித்தது சாதாரண ஜனங்களின் மனதைக் கவராவிட்டாலும் என் மனதைக் கவர்ந்தது. ஏறக்குறைய எல்லா நாடகங்களிலும் மந்திரி, பிரதானி முதலிய சில்லரை பாத்திரங்களையும் சமயோசிதமாக இவர் தரிப்பது வழக்கம். அவைகளிலும் மிகவும் பொருத்தமாக நடிப்பார்.

இவர் மனமோஹன நாடக சபையில் நடிப்புக் கலையில் தேர்ச்சி பெறச் செய்த இவரது மாணவர்களுள் முக்கியமான