பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


15. டி. கே. சி.


டி.கே.சி. என்று அன்பாக அழைக்கப்பெற்ற டி.கே. சிதம்பரநாத முதலியார் எனக்குத் துரத்து உறவினரும் ஆவார். கவிதையை எப்படி ரசிப்பது என்பதில் தனி வழி கண்டவர். யாரிடத்திலும் எந்தக் குற்றத்தையும் பாராட்டாமல் நிறைந்த அன்புடன் பழகும் இவர், சில குறைபாடுகளுடனும் வாழ்ந்துவந்தார். கம்பனில் எல்லையற்ற ஈடுபாடு உள்ள இப்பெரியார் ராமகாதையின் சில பாடல்களைத் தேர்ந்தெடுத்து, ’இவைதான் கம்பனுடைய பாடல்கள். ஏனைய எல்லாம் இடைச் செருகல்கள்’ என்ற கொள்கையில் வலுவாக நின்றார். முறையாகத் தமிழ் படித்தவர்களையோ தமிழ் இலக்கணம் பற்றிப் பேசுபவர்களையோ கண்டால் அவருக்கு ஆகவே ஆகாது. என் தந்தையாரிடம், பல சமயங்களில் சண்டை போடுவார். என்றாலும், பண்பாட்டின் உறைவிடமாக நின்றவர், அவர். அவர் எத்தகையவர் என்பதைக் காட்ட ஒரு நிகழ்ச்சியை இங்கே தந்துள்ளேன்.

1940இல் கலப்புத் திருமணம் செய்துகொண்டவன் நான். இராயப்பேட்டை பஜார் ரோடில் குடியிருந்தோம். 1941 தீபாவளியன்று டி.கே.சி அவர்கள் என் வீட்டைத் தேடிப்பிடித்து வந்தார். மிக்க அன்போடு அவரை வரவேற்றுச் சாய்வு நாற்காலியில் அமரச் செய்து என் மனைவியை அழைத்து, அறிமுகம் செய்துவைத்தேன். அன்று தீபாவளி நாள். நாங்கள் இருவரும் தலைமுழுகிப் புத்தாடை உடுத்திருந்தோம். டி.கே.சி அவர்கள் திடீரென்று, ‘ராஜம், இங்கே வா. இந்தத் தெருவில் யாராவது முடிதிருத்துவோர் இருந்தால் அவரை உடனே அழைத்து