பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



டி.கே.சி. ♦ 91


‘இந்தப் பயலின் தலையை’ மழுகச் சிறைக்கச் சொல். இதுவரை அவன் மண்டையில் ஏறி இருந்த பழைய தமிழ் இலக்கணம் இலக்கியம் எல்லாம் அதோடு போகட்டும். மறுபடியும் இவனுக்கு எண்ணெய் முழுக்காட்டி உட்காரவை, சிலப்பதிகாரப் புத்தகம் வீட்டில் இருக்கல்லவா? அதனை எடுத்துக் ‘கானல் வரி’ என்று ஒன்றிருக்கும். அதை மட்டும் கிழித்து எடுத்துவிடு. இந்தப் பயல் கையில் கொடுத்து, இதுமட்டும்தான் இளங்கோவடிகள் பாடினார், இது இல்லாமல் முன்பின் இருப்பதெல்லாம் இடைச்செருகல்’ என்று சொல்லிக் கொடு என்று பேசிமுடித்தார். ஆனால், புதுமணப் பெண்ணாகிய அவளுக்கு டி.கே.சி சொன்ன அந்த வார்த்தைகள் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தன. எல்லாவற்றையும் விட்டுவிட்டு, சிற்றுண்டி எதையோ தந்தாள். அதைச் சாப்பிட்டுவிட்டுப் புறப்பட்டுவிட்டார். இது டி.கே.சி யின் ஒரு புறம்.

ஒரு வாரம் கழித்து அவருடைய பெயரைக் குறிக்கப் பெற்ற தாள்களில் 12 பக்கத்தில் ஒரு கடிதம் எழுதி அஞ்சல் மூலம் அனுப்பி வைத்தார்.

‘நான் ஏதோ பேசிவிட்டேன்; ஆனால், கல்கியிடம் இதுபற்றிச் சொன்னபொழுது அவர் மிகவும் வருத்தப் பட்டார். புது மணத் தம்பதிகள் வீட்டிற்குச் சென்று ‘தலையை மொட்டையடி’ என்றெல்லாம் தீபாவளியன்று பேசுவது எவ்வளவு தவறு என்பதைக் கல்கி எடுத்துக் கூறியபொழுதுதான் என் தவறு எனக்கே புரிந்தது. நீங்கள் இருவரும் பெரிய மனது பண்ணி என்னை மன்னித்து விடுங்கள். என்ன? என்னை மன்னிப்பீர்கள்தானே’ என்ற முறையில் கடிதம் முடிந்திருந்தது. ஆம். டி.கே.சி என்ற மாமனிதரின் மறுபக்கம் இது. ஆழ்வார்களும் நாயன்மார்களும் இறைவன் புகழைப் பாடல்களாகப் பாடிப் பாடி அவன் திருவடி அடைந்தனர். டி.கே.சி என்பவர் பாடல்களைச் சுவைத்துச் சுவைத்து நாதப் பிரம்மத்திலேயே தம்மை ஐக்கியப்படுத்திக்கொண்ட மாமனிதர்.