பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


16. மூதறிஞர் ராஜாஜி


இந்தியப் பெருநாட்டின் தலைசிறந்த அறிவாளிகளுள் ஒருவராக வைத்து எண்ணப்படுபவர், ‘ராஜாஜி’ என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட சக்கரவர்த்தி சி.இராஜகோபாலாச்சாரியார். 20ஆம் நூற்றாண்டில் தமிழர்களிடையே அவரையொத்த நுண்மாண் நுழைபுலம் உடைய அறிவாளியைக் காண்பது அரிதான காரியம். ஆங்கிலப் புலமையும், வடமொழி, தமிழ் என்பவற்றில் ஓரளவு புலமையும் பெற்றிருந்த அவர், எந்த ஒரு விஷயத்தையும் தமக்கே உரிய தனிப்பட்ட முறையில் காணும் ஆற்றல் பெற்றவர். அவர் சிந்தனை ஓட்டத்தில் ஆசா-பாசங்கள், விருப்பு-வெறுப்புக்கள், வேண்டியவர்-வேண்டாதவர் என்ற பாகுபாடு என்பவை தலைகாட்டுவதேயில்லை. தமக்குத் தோன்றிய முடிவுகளை உலகம் ஏற்றுக்கொள்ளுமா இல்லையா என்று கவலையேபடாமல் ஆணித்தரமாகச் சொல்லும் ஆற்றலும் நெஞ்சுறுதியும் உடையவர் அப்பெருமகனார்.

இப்பெரியாரை தூரத்தே நின்று அவர் சொற்பொழிவுகளைக் கேட்டதைத் தவிர நெருங்கிப் பழகும் வாய்ப்பு இருமுறைதவிர வேறு எனக்குக் கிடைத்ததேயில்லை. 1943 என்று நினைக்கின்றேன். இராமகிருஷ்ண நிறுவனங்களை நிருவகிக்கும் இராமானுஜாச்சாரியார் என்பவர் திரு.வி.கவின் நெருங்கிய தோழர் ஒருமையிற் பேசிக்கொள்ளும் அளவிற்கு நெருங்கிய நண்பர்கள்.

ஒரு நாள் திரு.வி.க.வின் வீட்டிற்கு வந்த அவர், அந்த ஆண்டு (1943 இராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆண்டுவிழாவில் திரு.வி.க. வைப் பேசுமாறு அழைத்தார்.