பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூதறிஞர் ராஜாஜி ♦ 93


ராஜாஜி அவர்கள் தலைமை வகிப்பார் என்றும் ஆங்கிலத்தில் டி.எம்.பி. மகாதேவனும், தெலுங்கில் ஒருவரும் பேசுவார்கள் என்றும், திரு.வி.க. தமிழில் பேசவேண்டும் என்றும் அழைத்தார். அன்று தமக்கு வேறு பணி இருப்பதால் வர இயலாது என்று மறுத்த திரு.வி.க. பக்கத்தில் அமர்ந்திருந்த என்னைக் காட்டி ‘இவனை அழைத்துக்கொண்டுபோய்ப் பேசச் செய்’ என்றார். இராமனுஜாச்சாரியருக்குப் பெரு வருத்தம் ‘இராஜாஜியும் மகாதேவனும் கலந்துகொள்ளுகின்ற ஒரு கூட்டத்தில் முன்பின் தெரியாத இவனை எப்படிப் பேசச் சொல்வது? நீ என்ன விளையாடுகிறாயா?’ என்று திரு.வி.கவைக் கேட்டுவிட்டார். கொஞ்சம் உஷ்ணத்துடன் திரு.வி.க. “இராமானுஜாச்சாரி! நீ இவனைக் கொண்டு போய்ப் பேசச் சொல். உங்கள் இராஜாஜியும், மகாதேவனும் அதைக் கண்டு வியப்படையவில்லையானால் மறுபடியும் என்னிடம் வந்து சொல்” என்று கூறிவிட்டார்.

ஆச்சாரியருக்குப் இது முற்றிலும் பிடிக்கவில்லை. நாள் நெருங்கிவிட்டதால் வேறு ஆளை ஏற்பாடு செய்ய வழியுமில்லை. இந்த நிலையில் அழைப்பில் இராமானுஜாச்சாரியார் தம்முடைய வெறுப்பைக் காட்டிவிட்டார். என்னுடைய முதலெழுத்துக்களாகிய ‘அ.ச.’ என்பவற்றைப் போடாமல் ‘ஞானசம்பந்தம் ஆஃப் பச்சையப்பாஸ்’ தமிழில் பேசுவார் என்றுமட்டும் அச்சடித்து விநியோகம் செய்து விட்டார்.

விழாத் தொடங்கிற்று. தலைவர் இராஜாஜியின் ஒரு பக்கத்தில் நானும் மறுபக்கத்தில் முனைவர் மகாதேவனும் அமர்ந்திருந்தோம். உட்கார்ந்ததிலிருந்து இராஜாஜி என்னைத் திரும்பித் திரும்பிப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தார். ஏனென்று எனக்குப் புரியவில்லை. மகாதேவன் பேசி முடித்ததும் இராஜாஜி அடுத்த