பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98 ♦ நான் கண்ட பெரியவர்கள்


விஞ்ஞானத்தைச் சமயத்துடன் கோத்துக்கோத்து நீ பேசியது எனக்கு ரொம்பப் பிடித்துவிட்டது. என்னுடைய நல்வாழ்த்துக்கள்” என்று கூறி முடித்தார். ‘பெரியவராகிய தங்கள் ஆசீர்வாதத்திற்கு நான் பெரிதும் நன்றியுடையேன்’ என்று கூறினேன். ஒரு நிமிஷம் அமைதியாக இருந்துவிட்டு “புத்திமதி யென்பது எப்பொழுதும் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்று. ஆனாலும் உன் பேச்சைக் கேட்டபிறகு இந்தப் புத்திமதியை உனக்குச் சொல்லவேண்டும் என்ற ஆவல் தோன்றிற்று. உன்னைப் போல் பேசும் இளைஞர்களின் சேவை, இந்த நாட்டிற்கு மிகமிகத் தேவை. நீ நீண்டகாலம் வாழ்ந்து இந்தப் பணியைச் செய்ய வேண்டும்” என்றார். “தங்கள் ஆசியுடன் அதைச் செய்வேன்” என்று கூறினேன். “சரி நான் சொன்னதை ஒத்துக்கொண்டாயல்லவா? இப்பொழுது ஒரு சின்னப் புத்திமதி. நீ நீண்டகாலம் வாழவேண்டுமென்றால் மூச்சுக்காற்றை வீணாக்கக்கூடாது. உனக்கு முன்னால் மைக் இருக்கிறது. எவ்வளவு மெல்லிய குரலில் பேசினாலும் இந்தக் கருவி அனைவரும் அதைக் கேட்கும்படி செய்துவிடும். அப்படியிருக்கையில் ஏன் இப்படி உரத்த குரலில் உயிரைப் பிடித்துக்கொண்டு பேசவேண்டும்? இனி எப்பொழுது நீ மைக்கின்முன் நின்றாலும் என் நினைவு வரட்டும். மீண்டும் உன்னை ஆசீர்வதிக்கிறேன்” என்று சொல்லிப் போய்விட்டார்.

அடுத்த இரண்டு கூட்டங்களில் இராஜாஜி நினைவுக்கு வர மெல்லிய குரலில் பேசினேன். “நீதான் பேசுகிறாயா?” என்று எல்லோரும் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அத்துடன் அப்பெரியவரின் புத்திமதியைக் காற்றில் விட்டுவிட்டேன்.

அவருடைய புத்திமதியை விட்டாலும் அம்மாமனிதரின் ஆசி இன்றும் இருந்து, எண்பத்தைந்து ஆண்டுகள் வாழ உதவி புரிகிறது என்பதை நினைந்து, அந்த ஆசிக்கும் அவருக்கும் நன்றி செலுத்துகிறேன்.