பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100 ♦ நான் கண்ட பெரியவர்கள்


கேட்டவுடன் ‘எனக்கு என்ன தெரியும் பிரபந்தத்தில்? யாரையாவது தீவிர வைணவர்களைக் கொண்டு இதனை வெளியிடு’ என்றார். ராஜம் விடுவதாக இல்லை. கடைசியாகச் சி.பி. அவர்கள் வந்து வெளியிடுவதாக ஒப்புக் கொண்டார். சி.பி. அவர்கள் பஞ்சகச்சம் வேட்டி கட்டி ஒரு சட்டை அணிந்துகொண்டு மிகுந்த ஈடுபாட்டுடன் வந்து வெளியீட்டு உரையாக அற்புதமான ஓர் உரையை நிகழ்த்தினார். பல்கலைச் செல்வர் தெ.பொ.மீ. அவர்களும், நானும், எஸ்.ராஜம் அவர்களும் வியப்பின் எல்லைக்கே சென்றுவிட்டோம். அவ்வளவு அற்புதமாகச் சி.பி. அவர்கள் தமிழில் பேசியது அதைவிடப் புதுமை.

இதன்பிறகு ராஜத்திற்குச் சங்க இலக்கியங்கள், தொல் காப்பியம், கம்ப ராமாயணம், வில்லி பாரதம் ஆகிய அனைத்தையும் இதே முறையில் கொண்டுவரவேண்டும் என்ற விருப்பம் மிகுந்தது. இப்பதிப்புகளுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. அன்றுவரை, எந்தப் பழைய பாடலை எடுத்துப் படித்தாலும், சொற்களைப் பதம் பிரிக்காமல் சீர் ஒன்றின் அடிப்படையிலேயே அவை அச்சிடப்பெற்றிருக்கும். புதிதாகப் படிப்பவர்கள் படித்தால் ஒரு வரிகூட விளங்காது. அந்த நிலையைப் போக்க வேண்டும் என்று நினைத்தார் ராஜம். எல்லாப் பாடல்களையும் சீர்பற்றிக் கவலைப்படாமல், தனித்தனிச் சொற்களாகப் பிரித்து, தாமே அச்சிட வேண்டுமென்று விரும்பினார். இந்த முறையில் முதலாயிரம் வெளிவந்தவுடன் பயங்கரமான எதிர்ப்புகள் தோன்றின. ‘தமிழின் அருமை தெரியாதவர்கள் தமிழ்ப் பாடலைப் புரிந்து கொள்ளாதவர்கள் இப்படி அக்கு வேறு ஆணி வேறாகப் பாடலைப் பியத்து வெளியிடுவது தமிழுக்குச் செய்யும் துரோகம்’ என்று, தமிழ்ப் புலவர்கள் என்று தம்மைச் சொல்லிக்கொள்வோர் பலர் ராஜத்திற்குக் கடிதம் எழுதினர். தமிழுக்குச் செய்யும் இக்கொடுமையில் தமிழ் கற்ற தெ.பொ.மீ.யும் நானும் இடம் பெறுவது மேலும் கொடுமையானது என்றெல்லாம்