பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



மர்ரே எஸ். ராஜம் ♦ 101


கடிதங்கள் வந்தன. வேறு ஒருவராக இருப்பின் ‘நமக்கு ஏன் இந்த வம்பு’ என்று சொல்லி, இப்பணியையே உதறிவிட்டிருப்பர். எதிர்ப்பு மிக மிக ராஜம் அவர்களின் உறுதியும் வலுப் பெற்றது. சங்க இலக்கியங்களோடு நிறுத்திக்கொள்ளலாம் என்றிருந்த அவர், தமிழ் இலக்கியம் முழுவதையும் இந்த முறையில் கொண்டுவர வேண்டும் என்று நினைத்து, பத்து, பதினைந்து புலவர்களை இதற்கென நியமித்தார். 12ஆம் நூற்றாண்டில் தோன்றிய பெரிய புராணம்வரை இப்படிச் சொல் பிரித்து எழுதும் பணி தொடர்ந்தது. இதைவிடச் சிறப்பு ஒன்று உண்டு. சங்க இலக்கியங்களுக்கும் இராமாயணம் பாரதம் ஆகியவற்றிற்கும் அட்டைகளில் ஓவியம் இருக்க வேண்டும் என்று நினைத்தார். தலை சிறந்த ஒவியராக விளங்கும் கோபுலு அவர்களை இதற்கென ஏற்பாடு செய்தார். புறநானூறு போன்ற தொகுப்பு நூல்களுள் ஏதாவது ஒரு சிறந்த பாடலை அடிப்படையாக வைத்துக்கொண்டு ஓவியம் வரையப் பெற்றது. கோட்டு வரைபடம் என்ற முறையில் கோபுலு அவர்கள் வியக்கத் தகுந்த ஒவியங்களை வரைந்து கொடுத்தார். சங்க இலக்கியங்களாகிய பத்துப் பாட்டு, எட்டுத் தொகை போக, சிலப்பதிகாரம், இராமாயணம், மகாபாரதம், திருவாசகம் என்பவை வெளிவந்தன. அக்காலத்தில் பல இலட்ச ரூபாய்களை எவ்விதக் கைம்மாறும் கருதாது செலவழித்து இந்த மாபெரும் தொண்டைச் செய்தவர் ராஜம் ஆவார். அவர் நல்ல நேரத்தில் தொடங்கியதால்போலும் இன்று வருகின்ற பதிப்புகள் எல்லாம் சொல் பிரித்தே அச்சிடப் பெறுகின்றன. துரதிஷ்டவசமாக அவர் காலம் சென்ற பிறகு, எஞ்சியுள்ள நூல்கள் சொல் பிரித்து எழுதப் பெற்று இருப்பினும் அவற்றை வாங்கி வெளியிடுவார் இல்லாமல் போகவே, புதுவையில் உள்ள இண்டாலஜி நிறுவனத்தார் அச்சிடாத நூல்களையெல்லாம் எடுத்துச் சென்று விட்டனர்.