பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102 ♦ நான் கண்ட பெரியவர்கள்



ஐம்பதுகளில் தமிழ் இலக்கியங்களைப் புதிய முறையில் சொல் பிரித்து, அச்சிட்டு அடக்க விலைக்குத் தந்து, தமிழ் மொழிக்குப் பெரும் பணி செய்த இவரை மாமனிதர் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?


18. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்


1942-ல் கல்விக்கழகம் என்ற பெயரில் ஓர் அமைப்பு, புதுவையில் பணிபுரிந்துவந்தது. 1942ஆம் ஆண்டு அந்த அமைப்பின் ஆண்டு விழாவிற்காக நண்பர் கி.வா.ஜகந்நாதனும் நானும் சென்றிருந்தோம். மாலையில்தான் கூட்டம் தொடங்கும். பகல் முழுதும் வேறு பணியின்மையால் அமைப்பாளர்கள் ஒரு கார் என்னிடம் தந்து, ஊரைச் சுற்றிப் பார்க்குமாறு சொல்லிவிட்டுப் போயினர். காலை 8 மணி அளவில் எங்கள் காலைக் கடன்களை முடித்துக்கொண்டோம். கார் இருந்த காரணத்தால், கி.வா.ஜ.விற்கு ஒரு யோசனை தோன்றிற்று. ‘இந்த ஊரில் ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தின் ஒரு பகுதியில் ஒரு பெரிய துறவி இருக்கிறார். அவரைப் பார்த்துவிட்டு வரலாம்’ என்றார். அந்த யோசனை ஏற்புடையதாகப் பட்டதால், இருவரும் கிளம்பினோம். நானே காரை ஒட்டிச் சென்று ஆசிரமத்தினுள் குறிப்பிட்ட இடத்தை அடைந்தோம். சற்று உயரமான ஒர் இடத்தில் அந்தத் துறவி அமர்ந்திருந்தார். அவர் மெளனியாதலால் சிறு துண்டுக் காகிதங்களைத் தம்மிடம் வைத்திருந்தார். நாம் எதனைக் கேட்டாலும் அதற்குரிய விடையை அவர் அந்தத் துண்டுக் கடிதங்களில் எழுதிக் காட்டுவார். இதுதான் நடைமுறை. இருவரும் போய் நின்றோம். கி.வா.ஜ.வை அவர் வரவேற்றார். கி.வா.ஜ.வும் என்னை அவரிடம் அறிமுகம் செய்துவைக்கவில்லை. அந்தப் பெரியவரும் என்னை யார் என்று கேட்கவில்லை. கி.வா.ஜ.வும் அவரும் உரையாடிக்கொண்டிருந்தனர்.