பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108 ♦ நான் கண்ட பெரியவர்கள்


பாடக்கூடிய ஒருவர் குடித்தால் என்ன, பரத்தை வீடு சென்றால் என்ன? அந்தக் கவிஞனைப் போல ஒரே ஒரு பாட்டை எழுதக்கூடிய ஆற்றலை எனக்கு ஆண்டவன் தந்தால், நான் குடிக்கத் தயார், பரத்தை வீடு செல்லத் தயார். இவையெல்லாம் தனிமனிதனுடைய உடல்பற்றிய குறைகளே தவிர, அவனுடைய மனத்திட்பத்திற்கு இவை பகை அல்ல. இந்தச் சிறு குற்றங்கள் கவிஞனின் உடம்பு மாயும் பொழுது உடன் மறைந்துவிடும். ஆனால், அவன் படைப்பு தமிழ் உள்ள வரை நின்று நிலவும்’ என்ற முறையில் பேசிக்கொண்டே போனேன்.

இவற்றைக் கேட்டுவிட்டு நண்பர் நா.பா. கோபமாக எழுந்து சென்றுவிட்டார்.

அன்றிரவு ஒரு மணி இருக்கும். தொலைபேசி மணி ஒலித்தது. யாரோ வெளிநாட்டுக்காரர்கள் நேரம் தெரியாமல் அழைக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டு, தொலைபேசியைக் காதில் வைத்தேன். எதிர்ப்புறம் ஒரு அழுகுரல், எனக்கு ஒன்றும் புரியவில்லை. அழுகையினூடே, ‘அ.ச. தெரியவில்லையா என்னை? நா.பா.தான் பேசுகிறேன். ஒரு மாபெரும் கவிஞனை இனம் கண்டுகொள்ளாமல் இதுவரை இருந்தது ஒரு தவறு. இரங்கல் கூட்டத்தில் தாறுமாறாகப் பேசியது மற்றொரு தவறு. கவிஞர் என்னை மன்னிப்பாராக’ என்றார். கவிஞர் பாரதிதாசன் ஒரு மாமனிதர் என்பதை 1942 இலேயே கண்டுகொண்டேன். இதுவரை நான் பழகி வந்த நா.பார்த்தசாரதி என்ற மனிதருள் ஒரு மாமனிதர் இருப்பதையும் இப்பொழுது அவர் வெளிப்பட்டதையும் கண்டுகொள்ள முடிந்தது. அமரராகிவிட்ட இந்த இரண்டு மாமனிதர்களும் தமிழ் இலக்கியத்திற்குச் செய்த சேவை போற்றுதற்குரியதாகும்.