பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112 ♦ நான் கண்ட பெரியவர்கள்


அமைச்சுப் பதவியைப் போக்கிய தில்லைக் கூத்தன் திரு.வி.க.வின் பள்ளிப் படிப்பையும் போக்கினான்.

1920களில் தமிழகம் இருந்த நிலையை முன்னர்க் குறிப்பிட்டுள்ளோம். ஒன்றுக்கொன்று ஒரு சிறிதும் தொடர்பில்லாதது என்று கருதப்பட்டதும் முன்னர்க் குறிப்பிட்டதுமாகிய இந்த மூன்றையும் ஒன்றாக இணைக்கவே திரு.வி.க.வைப் படைத்தான் தில்லைக்கூத்தன். அப்பெருமான் இன்னும் ஒரு காரியத்தையும் செய்தான். மணவாழ்க்கையில் ஈடுபட்டிருந்த திரு.வி.க.வுக்கு மனைவியும் மகனும் இருந்தனர். அவருடைய அரிய பணியில் ஒரு பகுதியில் அவர்களுக்காகச் செலவிட வேண்டிய சூழ்நிலை உருவாகாமல் இருக்கவும் அவருடைய முழுப்பணியும் மேலே கூறிய மூன்றிற்கும் தரப்படவேண்டும் என்று முடிவு செய்த கூத்தன், மிகக் குறுகிய காலத்தில் அவருடைய மனைவி மகன் இருவரையும் அழைத்துக்கொண்டான்.

சைவசமயத்தைச் சார்ந்த தோத்திரம், சாத்திரம் ஆகியவற்றைத் தெளிவாகக் கற்றார் திரு.வி.க. அடுத்தபடியாக அவருடைய மனத்தைக் கவர்ந்தது அன்றைய அரசியல். மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பெற்ற திருவி.க. முழுநேர அரசியல்வாதியாக மாறினார். இதில் வியப்பு என்னவென்றால், மகாத்மா காந்தியால் இழுக்கப்பெற்ற அதே திரு.வி.க. பொதுவுடைமைத் தத்துவம் பேசிய காரல் மார்க்ஸாலும் ஈர்க்கப்பெற்றார். மாபெரும் சொல்வன்மை உடையவராகிய இவர் அரசியல் மேடைகளில் புறநானுற்றையும் குறுந்தொகையையும் விளையாட விடுவார்.

இது ஒரு புறமிருக்க, அன்றைய பழைமை விரும்பிச் சைவர்களிடையே ஏசுவின் தத்துவங்கள், நபிகள் நாயகத்தின் தத்துவங்கள், நம்மாழ்வாரின் தெய்விகப் பாடல்கள் ஆகியவை பெருக்கெடுத்தோடப் பேசினார்.