பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தமிழ்த் தென்றல் திரு.வி.க. ♦ 115


சொல்லிவிட்டு, ‘யார் யார் உயிர் வாழ்க்கையில் உயர்ந்த குறிக்கோள் அன்பு என்று சொல்கிறார்களோ அவர்கள் அனைவரும் சைவர்களே. ‘ஆட்டுக்குட்டிக்குப் பதிலாக என்னையே பலியிடலாம் என்று சொன்ன புத்த தேவனும், காணா உயிர்க்கும் அன்பு செலுத்த வேண்டும் என்று சொன்ன சமணமத ஸ்தாபகராகிய ரிஷப தேவரும், பிறர் செய்த தீமைகளைப் பொறுத்து அன்பு செய் என்று சொன்ன ஏசுநாதரும் சைவர்களே. வெவ்வேறு பெயர்களில் இருப்பினும் இவர்கள் அனைவரும் சைவத்தின் முன்னோடிகள் என்ற முறையில் என் பேச்சுத் தொடர்ந்தது. புத்தரைப்பற்றிச் சொல்ல ஆரம்பித்தவுடனேயே எல்லையற்ற சினத்துடன் திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் எழுந்து போய்விட்டார். சச்சிதானந்தம் பிள்ளை போன்ற அவர்களுடைய சீடர்கள் சிலரும் எழுந்து போய்விட்டனர். இதைப் பார்த்த நான், ‘மாறுபட்ட கருத்துக்களைக் கேட்டுச் சகிக்க முடியாத இவர்கள் அன்பின் வழி நின்றவர்கள் அல்லர்! போலிச் சைவர்கள்’ என்று கூறி முடித்தேன். அங்கங்கே சிறுசிறு பரபரப்புத் தோன்றினாலும் பெரிதாக ஒன்றும் நடந்துவிட இல்லை.

என்னை அடுத்துத் தெ.பொ.மீ. அவர்கள் பேசத் தொடங்கினார். கழுத்தில் போட்ட மாலையை கழட்டாமலேயே பேசும் வழக்கம் உடையவர் அவர். அன்று அவருக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பை விட்டுவிட்டு, என் பேச்சை அப்படியே தொடர்ந்தார். சைவத்தின் உயிர்நாடி கண்ணப்பர் என்றும், கண்ணப்பன் என்ற சொல்லும், சிவம் என்ற சொல்லும், அன்பு என்ற சொல்லும் ஒரே பொருளையுடையன என்ற முறையில் தொடங்கி, பல்கலைச் செல்வர் அவருக்கே உரிய பாணியில் முக்கால் மணிநேரம் பொழிந்து தள்ளினார். எங்கள் இருவர் பேச்சையும் அடுத்து, தலைவர் முடிவுரை என்று போட்டிருந்ததால், எங்கள் இருவர் பேச்சையும் உளப்படுத்தி,