பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2 ♦ நான் கண்ட பெரியவர்கள்


மேல் கொள்ளலாம்:.......வேறொருவர் காணாமல் உலகத்து உலாவலாம்’ (தாயு:தேசோ:8) என்று வரிசைப்படுத்தித் தாயுமானவர் கூறுவதைச் ‘செயற்கரிய’ என்ற சொல்லால் குறிப்பிடலாமா என்றால், அல்ல என்கிறார் அவர். இவைகூடச் செயற்கரிய செயல்கள் அல்ல என்றால், வேறு எதைத்தான் செயற்கரிய செயல் என்று கூறுவது? இந்தச் சந்தேகத்திற்குத் தாயுமானவப் பெருந்தகையே இதே பாடலில் விடை கூறுகிறார். இவையெல்லாம் மிகச் சாதாரணச் செயல்கள் என்று கூறிய அப்பெரியவர், எது செயற்கரிய செயல் என்ற வினாவிற்கு விடை கூறும் முகமாகச் ‘சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறன் அரிது’ என்று கூறுகிறார்.

செயற்கரிய செயல் எது என்று தேடித் திரிந்த நமக்குத் தாயுமானவப் பெருந்தகை விடை கூறிவிட்டார். நம் உடலுடன் பிறந்த ஐம்பொறிகள், இந்தப் பொறிகளை ஆட்டுவிக்கும் மனம் என்பவை ஒரு கணம்கூட நம் வசத்தில் இல்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், அவை நம்மை இழுத்துச் செல்கின்றன. ஐம்பொறிகள், மனம் என்பவற்றின் அடிமையாகவே நாம் இருந்துவிடுகிறோம். பொறிகளையும் மனத்தையுமே அடக்க முடியாத நமக்கு அந்த மனத்தின் அடித்தளத்தில் இருக்கும் சிந்தையை எவ்வாறு அடக்க முடியும்? மனம், சித்தம், புத்தி, அகங்காரம் என்ற அந்தக்கரணங்கள் நான்கில் மனமே இரண்டு நிலைகளில் உள்ளது. மேல்மனம், கீழ்மணம் என்ற இரண்டையும் அடுத்துச் சிந்தையும் இரண்டு நிலைகளில் உள்ளது. மேல்சித்தம் (consciousness), அடிச்சித்தம் (deeper consciousness). எனவே இந்த வேறுபாட்டை அறிந்துதான் தாயுமானவப் பெருந்தகை மனத்தை அடக்கி என்று கூறாமல், ‘சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறன் அரிது’ என்கிறார். யோகப் பயிற்சியின் மூலம் மனத்தை அடக்கி, ஒருநிலைப்படுத்தப்