பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தமிழ்த் தென்றல் திரு.வி.க ♦ 121


சொல்லி விட்டு எழுதிக்கொள்ளத் தயாரானார். தலைவர், துணைத்தலைவர், செயலாளர், உறுப்பினர்கள் என்ற முறையில் மடமடவென்று பெயர்கள் கூறப்பெற்றன. அவற்றைத் தம் கையால் எழுதி, இவர்கள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப் பெற்றார்கள் என்று அடியில் எழுதிக் கையொப்பமிட்டுவிட்டு அதைப் படித்தும் காட்டினார். எந்தக் கட்சிக்காரரும் வாய் திறக்கவில்லை “ஏற்றுக்கொண்டீர்களா?” என்று சின்னையா கேட்டதும், அனைவரும் கைதட்டி ஆமோதித்தனர்.

சின்னையா செல்வதற்குமுன் குருக்ஷேத்திரமாக விளங்கிய அந்த இடம், அமைதிப் பூங்காவாக மாறிற்று. ‘போய் வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு இருவரும் காரை நோக்கிப் புறப்பட்டோம். இந்த நிலையில் இரு கட்சிக்காரரும் ஒடி வந்து “தலைவரையா நீங்க இங்கேயே இருங்க. வண்டியை இங்குக் கொண்டு வருகிறோம்” என்று சொல்லிவிட்டு, ஒடிச் சென்று வண்டியைக் கொண்டு வந்தனர். குருக்ஷேத்திரம் பூங்காவாக மாறுவதற்கு அரை மணிதான் தேவைப்பட்டது.

சின்னயாவின் வீட்டில் இறக்கிவிட்டவுடன் “சம்பந்தா! நீ இந்தக் கார்கூடவே போய், சீனிவாச ஐயங்காரிடம் என் சார்பாக நன்றி பாராட்டிவிட்டு வா” என்று அனுப்பினார். வண்டி பங்களாவுக்குள் நுழைந்ததும் யாருக்கும் தலை வணங்காத அந்தப் பெருமகனார் தாமே வெளியே வந்து “உள்ளே வா” என்று என்னை அழைத்துச் சென்றார். முழுவதையும் கேட்ட பிறகு, தமக்குத் தாமே பேசிக் கொள்வதுபோல, உரத்த குரலில் ஏதேதோ சொன்னார். அந்த நேரத்தில் அவர் சொல்லியது எதுவும் எனக்கு விளங்கவில்லை. “கம்மனாட்டி, கம்மனாட்டி எல்லாத்தையும் இந்த நாட்டுக்காகத் தொலைச்சான். ஒரு சின்ன அச்சாபீஸ் வாங்கித் தருகிறேன் என்று தலையாலை அடிச்சிக்கிட்டன்.