பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்த் தென்றல் திரு.வி.க. ♦ 127




பேச ஒப்புக்கொண்டது வியப்பினும் வியப்பேயாகும். ‘பெண்ணின் பெருமை’ என்ற நூலை எழுதிய திரு. வி. க. விற்குக் கிடைத்த வெற்றியாகும் இது.

சின்னையா அவர்கள் விரும்பியபடியே அன்றைய கூட்டம் இனிதாக முடிந்தது. இந்த இடத்தில் தெய்வ சிகாமணி முதலியார்பற்றி ஒரு நிகழ்ச்சியைச் சொல்ல வேண்டும். 1940 செப்டம்பர் 15இல் என் திருமணம் மிக எளிய முறையில் நடைபெற்றது. இரண்டு மாதம் கழித்து திரு.வி.க.வின் வீட்டில், எட்டயபுரம் சமஸ்தான ஜோசியர் ஒருவரும், அவர் போன்ற மற்றொரு ஜோசியரும் ஏதோ பஞ்சாங்கத்தைப் புரட்டிக்கொண்டு நாள் பார்த்துக் கொண்டிருந்தனர். திரு.வி.க.வும் தெய்வசிகாமணி முதலியாரும் உடனிருந்தனர். பட்சி அரசில் இருக்கும் நேரம்தான் திருமணத்திற்கு உகந்த நேரம். ஜோசியர்கள், காலை ஐந்து மணி முதல் எட்டு மணிக்குள், பட்சி அரசிலிருக்கும் நாளைத் தேடிக்கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கே சென்ற நான் இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். தெய்வசிகாமணி முதலியார் தம்முடைய மகன் நச்சினார்க்கினியனின் திருமணத்திற்கு நாள் பார்த்துக் கொண்டிருந்தார் என்பது தெரிந்தது. முதலியார் அவர்கள் என்னைப் பார்த்து “ஏம்பா! செப்டம்பர் 15இல் திருமணம் செய்து கொண்டாயே? பட்சி அரசிலிருந்த நேரமா அது?” என்றார். எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. “ஐயா! திருமணம் செய்து கொண்டது நான். நான் மணஞ் செய்து கொண்டது ஒரு பெண்ணையே தவிர, பட்சியை அன்று. அது கூட்டுள் இருந்தாலும், வெளி வந்தாலும், அரசில் வீற்றிருந்தாலும் எனக்கு அதுபற்றிக் கவலையில்லை. நான் பஞ்சாங்கத்தையோ நாளையோ பார்த்துத் திருமணம் செய்து கொள்ளவில்லை” என்று கூறி முடித்தேன். தெய்வசிகாமணி முதலியார் ஜோசியர்களைப் பார்த்து “இவன் திமிரைப் பார்த்தீங்களா? ஒரு மாதத்திற்கு